ஈரோடு மாவட்டத்தில் இருந்து 4,800 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம்; 3 ரெயில்களில் புறப்பட்டனர்


ஈரோடு மாவட்டத்தில் இருந்து 4,800 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம்; 3 ரெயில்களில் புறப்பட்டனர்
x
தினத்தந்தி 1 Jun 2020 12:01 AM GMT (Updated: 1 Jun 2020 12:01 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 4 ஆயிரத்து 800 பேர் 3 ரெயில்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் பணி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக விண்ணப்பித்த 17 ஆயிரம் பேரில் ஏற்கனவே 9 ஆயிரத்து 192 பேர் சிறப்பு ரெயில்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மேற்கு வங்காளத்தை சேர்ந்த 1,600 பேரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 1,600 பேரும், பீகாரை சேர்ந்த 1,600 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 800 பேரை அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதற்காக ரெயில் நிலையம் முன்பு தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வெள்ளை நிறத்தால் வட்டம் போடப்பட்டு இருந்தது.

முதலில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கான ரெயில் மாலை 4 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் வந்தது. முன்னதாக சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்ற அவர்கள் ஒவ்வொருவராக ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் ரெயிலில் ஏறி அமர்ந்ததும் ரெயில் புறப்பட்டு சென்றது. அதைத்தொடர்ந்து உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இரவு 8 மணிக்கும், பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் நள்ளிரவு 12.30 மணிக்கும் சிறப்பு ரெயில் மூலம் தங்களது சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர்.

தொழிலாளர்களை ரெயில் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர். ரெயில் நிலையத்துக்குள் பிற நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதுவரை ஈரோடு மாவட்டத்தில் இருந்து மொத்தம் 13 ஆயிரத்து 992 வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story