கொரோனா பாதிப்பால்தான் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார்: டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு


கொரோனா பாதிப்பால்தான் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார்: டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2020 12:31 AM GMT (Updated: 3 Jun 2020 12:31 AM GMT)

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை, 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவ கண்காணிப்பாளர் பிரிசில்லா(வயது 58) கடந்த மாதம் 27-ந்தேதி உயிரிழந்தார். அவரது நோய் குறிப்பு தாளில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என எழுதப்பட்டிருந்தது. ஆனால் இது கவனக்குறைவாக எழுதப்பட்டுள்ளது எனவும், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் செவிலியர் காண்காணிப்பாளர் பிரிசில்லா கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு:-

* சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர் கண்காணிப்பாளர் பிரிசில்லாவின் மறைவுக்கு முதல்-அமைச்சர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரிசில்லாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்தாலும், அவருக்கு ஏற்பட்ட நோய் அறிகுறிகளின்படியும், வழங்கப்பட்ட சிகிச்சையின் அடிப்படையிலும் அவருக்கு கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார் என உறுதியாகிறது. எனவே செவிலியர் கண்காணிப்பாளர் பிரிசில்லா குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணத் தொகையும், அவரது வாரிசுக்கு அரசு வேலை உள்ளிட்ட பிற பயன்பாடுகள் அளிக்க வேண்டும்.

* நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தெங்குமராட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய டாக்டர் ஜெயமோகன் பணியில் இருந்தபோது கொரோனா வைரசால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதைப்போல் தர்மபுரி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் குமுதா பணி முடிந்து வீடு திரும்பும்போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். எனவே இவர்கள் இருவருக்கும் மற்ற துறைக்கு வழங்குவது போல நிவாரணம் வழங்க வேண்டும்.

* தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றி கொரோனா பாதிப்பு ஏற்படும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அந்ததந்த மாவட்டத்தில் தனி தங்குமிடம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். கொரோனா தொற்று தீவிரமாக உள்ள டாக்டர் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளிக்க, தனி ‘பிளாக்’ அல்லது மருத்துவமனை ஏற்பாடு செய்து தர வேண்டும். மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் குறித்த விவரங்களை வெளிப்படையாக அந்தந்த மாவட்ட சங்க நிர்வாகிகளிடம் தினந்தோறும் வழங்கவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.


Next Story