ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்கள் 28-ந் தேதி தூத்துக்குடி வருகை தளவாய்சுந்தரம் தகவல்


ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்கள் 28-ந் தேதி தூத்துக்குடி வருகை தளவாய்சுந்தரம் தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2020 5:30 AM IST (Updated: 14 Jun 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்கள் 28-ந்தேதி தூத்துக்குடி வருகிறார்கள் என்று தளவாய் சுந்தரம் கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று அழகியபாண்டியபுரம், இரணியல், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை (நகரம் மற்றும் கிராமச்சாலைகள்) துறையின்மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை தாங்கி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

28-ந்தேதி வருகை

ஈரான் நாட்டில் தவிக்கும் 685 குமரி மீனவர்களை மீட்க வேண்டுமென தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெயசங்கரிடம் தொலைபேசி மூலம் குமரி மீனவர்களை அழைத்து வர வலியுறுத்தினார். ஈரானில் உள்ள உள்நாட்டு பிரச்சினையால் குமரி மீனவர்களை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது.

இருந்த போதிலும் குமரி மீனவர்களை அழைத்து வர இந்திய கப்பல் தூத்துக்குடியில் இருந்து ஈரானுக்கு புறப்பட்டுச் சென்றது. அவ்வாறு சென்ற கப்பல் தற்போது இந்திய-ஈரான் கடல் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பல் குமரி மாவட்ட மீனவர்கள் 685 பேர்களை ஏற்றிக்கொண்டு வருகிற 22-ந் தேதி இரவு ஈரானில் இருந்து புறப்பட்டு 28-ந் தேதி இரவுக்குள் தூத்துக்குடி வந்து சேருவதற்கான நடவடிக்கைகள் அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் திட்டம்

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி செயல்பாடுகள் மிகச்சிறப்பாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மிக கொடிய நோய்களில் ஒன்று. எனவே பொதுமக்கள் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படுவதோடு மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதோடு, தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டும். நாகர்கோவில் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து புத்தன் அணையில் இருந்து டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி நிறைவு பெரும் தருவாயில் உள்ளது. அதற்காக மின்சார துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு முன்பாக புத்தேரி முதல் தடிக்காரன்கோணம் வரை சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, 7 கி.மீ. நீளத்துக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது 5.4 கி.மீ. டெண்டர் விடப்பட்டுள்ளது. எஞ்சிய 6.7 கி.மீ. விரைவில் பணி நடைபெறும். அனைத்து கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளும் வருகிற மார்ச் மாத இறுதிக்குள் முடிவடையும்.

திரிவேணி சங்கமம்

திங்கள்நகர் பஸ் நிலைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. களியக்காவிளை பஸ் நிலைய பணிகள் கொரோனா காரணமாக தாமதப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் படித்துறைகள் கட்டப்பட்டு வரும் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும்.

இவ்வாறு தளவாய் சுந்தரம் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், நிர்வாக பொறியாளர் (குடிநீர் வடிகால் வாரியம்) கதிரேசன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பாஸ்கரன், உதவிபொறியாளர் (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) விஜயரகு, உதவி நிர்வாக பொறியாளர்கள் கோபாலகிருஷ்ணன், சங்கர், ராஜேந்திரன், உதவி பொறியாளர் ஆசிக் அகமது, அரசு வக்கீல் ஜெயகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story