மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் மாயனூர் தடுப்பணையை வந்தடைந்தது


மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் மாயனூர் தடுப்பணையை வந்தடைந்தது
x
தினத்தந்தி 14 Jun 2020 11:00 PM GMT (Updated: 14 Jun 2020 9:46 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் மாயனூர் தடுப்பணையை வந்தடைந்தது. இன்று முக்கொம்பில் இருந்து திறக்கப்படுகிறது.

வெள்ளியணை,

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்கு முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து காவிரி தண்ணீர் கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து விட்டார். முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரும், பின்னர் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் நேற்று காலை 8.30 மணி அளவில் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையை வந்தடைந்தது. அங்கிருந்து அப்படியே திறந்து விடப்பட்டதால் முக்கொம்பு மேலணை நோக்கி தண்ணீர்வந்து கொண்டிருந் தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மாயனூர் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரவில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது.

முக்கொம்பில் இருந்து...

இந்த தண்ணீர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முக்கொம்பு வந்தடைகிறது. முக்கொம்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்தூவி காவிரி தண்ணீரை வரவேற்கிறார்கள். பின்னர், இங்கிருந்து காவிரி தண்ணீர் கல்லணைக்கு திறந்து விடப்படுகிறது. பாசன தேவை மட்டும் இன்றி திருச்சி உள்ளிட்ட 12 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும், காவிரி தண்ணீர் பூர்த்தி செய்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story