காவிரி டெல்டா பாசனத்துக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு அமைச்சர்கள்-எம்.பி. பங்கேற்று விதைநெல், மலர்களை தூவினர்


காவிரி டெல்டா பாசனத்துக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு அமைச்சர்கள்-எம்.பி. பங்கேற்று விதைநெல், மலர்களை தூவினர்
x
தினத்தந்தி 17 Jun 2020 6:50 AM IST (Updated: 17 Jun 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் அமைச்சர்கள், எம்.பி., கலந்து கொண்டு விதைநெல், மலர்களை தூவினர்.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படவில்லை. தாமதமாக ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் கடந்த 306 நாட்களாக 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தது. இதனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி 8 ஆண்டுகளுக்குப்பிறகு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து விட்டார்.

அமைச்சர்கள் - எம்.பி.

இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக நேற்று நண்பகல் தஞ்சை மாவட்ட எல்லையான கல்லணையை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு மதியம் 1 மணிக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடத்திலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையொட்டி கல்லணையில் கடந்த சில நாட்களாக 106 மதகுகள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு இருந்தது.

முன்னதாக அணை திறப்பதற்காக கல்லணையில் உள்ள பொதுப்பணித்துறை மாளிகையில் இருந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் புறப்பட்டனர். கலெக்டர்கள் கோவிந்தராவ்(தஞ்சை), ஆனந்த்(திருவாரூர்), அன்புச்செல்வன்(கடலூர்), உமாமகேஸ்வரி(புதுக்கோட்டை), வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் முன்னிலையில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக் கண்ணு, புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.

விதைநெல்-மலர்கள் தூவினர்

பின்னர் மதகுகளில் இருந்து சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர்கள், விதைநெல்களை தூவி அமைச்சர்கள் வழிபட்டனர். முன்னதாக கல்லணை திறக்கப்படுவதையொட்டி கொள்ளிடத்தின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கல்லணை பூங்காவில் உள்ள ஆதிவிநாயகர் கோவில், கொள்ளிடத்தின் உள்பகுதியில் உள்ள கருப்பண்ணசாமி கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கல்லணையில் உள்ள கரிகால்சோழன், காவிரித்தாய், அகத்தியர், ராஜராஜ சோழன் சிலைகளுக்கும் கல்லணையை கட்டிய பொறியாளர் ஆர்தர் காட்டன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள்

இதில் எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), கோவிந்தராசு (பேராவூரணி), பவுன்ராஜ்(பூம்புகார்), மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெத்தினசாமி, ராம.ராமநாதன்.

கீழ்க்காவிரி வடிநில வட்ட தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், செயற்பொறியாளர்கள் ராஜன் (காவிரி), தமிழ்ச்செல்வன் (வெண்ணாறு), முருகேசன்(கல்லணைக்கால்வாய்), தோகூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து, விவசாய சங்க பிரதிநிதிகள் மன்னார்குடி ரெங்கநாதன், காவிரி தனபாலன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

3.15 லட்சம் ஏக்கர் சாகுபடி இலக்கு

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் ஆற்றில் வினாடிக்கு தலா 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்ததையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கரிலும், திருவாரூரில் 77 ஆயிரத்து 500 ஏக்கரிலும், நாகையில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரிலும் என 3 லட்சத்து 15 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயிர்க்கடன்

கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி பாசன பகுதி ஆறுகளில் கடைமடைக்கு சென்றடைந்த பின்னர் காரைக்கால் பாசனப்பகுதிக்கு உரிய நீர் பங்கீடு செய்து அளிக்கப்படும்.

கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடன், தரமான விதைநெல், உரங்கள் தேவையான அளவு வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்க வேண்டும். கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story