அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை டாக்டர்களுக்கு கலெக்டர் உத்தரவு


அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை டாக்டர்களுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 26 Jun 2020 1:49 AM GMT (Updated: 26 Jun 2020 1:49 AM GMT)

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் பேசியதாவது:-

தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலமாக கொரோனா வைரஸ் தொற்று மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை அதிகளவில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா விழிப்புணர்வு

மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் அனைத்து துறைகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள், அப்பகுதிகளை விட்டு வெளியே செல்லக்கூடாது. மேலும் தொற்று பரவாமல் இருக்க அனைத்து பகுதிகளிலும் உள்ள வியாபாரிகள், வணிகர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கியும், அனைவரையும் முக கவசம் அணிய அறிவுறுத்திடவும் வேண்டும். திருமண மண்டபங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கூட்டம் சேராமல் சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும்.

நடவடிக்கை

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சப்-கலெக்டர்கள் (விருத்தாசலம்) பிரவின்குமார், (சிதம்பரம்) விசுமகாஜன், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தாசில்தார்கள் கலந்து கொண்டனர். 

Next Story