சென்னையில் 3.65 லட்சம் பேர் வீட்டு தனிமை - மாநகராட்சி கமிஷனர் தகவல்


சென்னையில் 3.65 லட்சம் பேர் வீட்டு தனிமை - மாநகராட்சி கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 2 July 2020 12:00 AM GMT (Updated: 1 July 2020 11:15 PM GMT)

சென்னையில் 7 லட்சம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்றும், 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் இருக்கின்றனர் என்றும் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,


சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட கீரைத்தோட்டம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

சென்னையில் இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் முகாமில் கலந்துகொண்டுள்ளனர். வீடு, வீடாக நடத்தப்பட்டு வரும் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்படும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 113 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் கொரோனா பரவல் விகிதம் மிகவும் குறையும்.

தண்டையார்பேட்டை மண்டலத்தை பொருத்தவரை 55 இடங்களில் பெரியளவிலான குடிசைப்பகுதிகள் உள்ளன. தற்போது இந்த பகுதிகளில் கொரோனா பாதிப்பு 10 சதவீதமாக உள்ளது. குடிசைப்பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இலவசமாக மறுபயன்பாட்டுடன் கூடிய முககவசங்கள் வழங்கப்படுகிறது. தண்டையார் மண்டலத்தில் உள்ள 2 ஆயிரத்து 995 தெருக்களில், கடந்த 14 நாட்களாக 363 தெருக்களில் ஒரு பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் இதுவரை ஒரு பாதிப்பு கூட இல்லாத 157 தெருக்களில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆயிரத்து 789 இறப்புகளும், 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆயிரத்து 888 இறப்புகளும், 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆயிரத்து 754 இறப்புகளும் பதிவாகி உள்ளது. அதேபோல் 2018-ம் ஆண்டு மே மாதம் 5 ஆயிரத்து 146 இறப்புகளும், 2019-ம் ஆண்டு மே மாதம் 5 ஆயிரத்து 739 இறப்புகளும், 2020-ம் ஆண்டு மே மாதம் 4 ஆயிரத்து 532 இறப்புகளும் பதிவாகி உள்ளது.

இறப்பு விகிதத்தை பொருத்தவரை பெரியளவில் மாற்றம் இல்லை. அனைவரும் முககவசம், சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் இணை கமிஷனர் மதுசுதன் ரெட்டி, மண்டல கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழக செயல் இயக்குநர் டாக்டர் கே.பி.கார்த்திக்கேயன், வடக்கு வட்டார துணை கமிஷனர் ஆகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Next Story