மராட்டியத்தில் நாளை முதல் கடைகளை இரவு 7 மணி வரை திறந்து வைக்க அனுமதி


மராட்டியத்தில் நாளை முதல் கடைகளை இரவு 7 மணி வரை திறந்து வைக்க அனுமதி
x
தினத்தந்தி 8 July 2020 5:21 AM IST (Updated: 8 July 2020 5:21 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நாளை முதல் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம் என மாநில அரசு அறிவித்து உள்ளது.

மும்பை,

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக மிஷன் பிகின் அகெய்ன் திட்டத்தின் கீழ் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன்படி மாநிலத்தில் தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் அனைத்து வகையான கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்படி கடைகள் தற்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படுகின்றன. இந்த நிலையில், ஊரடங்கில் மேலும் ஒரு தளர்வாக, நாளை (வியாழக்கிழமை) முதல் கடைகள் செயல்படுவதற்கான நேரத்தில் கூடுதலாக 2 மணி நேரத்தை மாநில அரசு நீட்டித்து உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கடைகளில் கூட்டம் கூடாமல் தவிர்க்கும் நடவடிக்கையாக கடைகள் திறந்து வைக்க கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்து வைத்திருக்கலாம். மும்பை பெருநகரம், புனே, சோலாப்பூர், அவுரங்காபாத், மாலேகாவ், நாசிக், துலே, ஜல்காவ், அகோலா, அமராவதி மற்றும் நாக்பூர் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் வாரத்தின் 7 நாட்களிலும் கடைகள் செயல்படலாம். இருப்பினும் இந்த பகுதிகளில் உள்ள கடைகள் ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்பட வேண்டும். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் கடைகள் வாரத்தின் 7 நாட்களும் திறந்து இருக்கலாம்.

இதில் சமூக விலகல் விதிமுறைகளை மீறி கூட்டம் கூடுவது கண்டறியப்பட்டால் அந்த சந்தைகள் மற்றும் கடைகளை இழுத்து மூடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story