கோவை, நீலகிரியில்7 பேர் கொரோனாவுக்கு பலி


கோவை, நீலகிரியில்7 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 11 July 2020 9:22 AM IST (Updated: 11 July 2020 9:22 AM IST)
t-max-icont-min-icon

கோவை, நீலகிரியில் 7 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

கோவை,

கோவை போத்தனூரை சேர்ந்த 58 வயது பெண், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 8-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவரை கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல் பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த 61 வயது மூதாட்டி ஒருவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவில் மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு மாற்ற முடிவு செய்த நிலையில் திடீரென நேற்று உயிரிழந்தார்.

கோவை சரவணம்பட்டி அம்மன் நகர் மேற்கு பகுதியை சேர்ந்த 50 வயது ஆண் ஒருவர் உடல்நலக்குறைவால் கடந்த 7-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரை டாக்டர்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு மாற்ற முடிவு செய்தனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனாவுக்கு பலியான 3 பேரின் உடல்கள் பாதுகாப்பாக சுற்றப்பட்டு உறவினர்களிடம் காட்டப்பட்டது. ஆனால் உடலை தொடுவதற்கு அவர்களுக்கு அனுமதிக்கவில்லை. தொடர்ந்து போத்தனூர் பகுதியை சேர்ந்த 58 வயது பெண்ணின் உடல் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மீதமுள்ள 2 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டது. கோவையில் கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை 8 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லநள்ளி பகுதியில் தனியார் ஊசி தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலைக்கு கொரோனா பாதித்த மக்கள் தொடர்பு அலுவலர் வந்து சென்றார். அவருடன் தொடர்பில் இருந்த பலருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. அங்கு நிதி மேலாளராக பணிபுரிந்த 65 வயதான ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கூடலூர் கே.கே.நகரை சேர்ந்த 63 வயதான முதியவர் கொரோனா பாதிப்பால் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பலியானார். மஞ்சூர் அருகே தங்காடு கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குன்னூர் அருகே தாம்பட்டியை சேர்ந்த 65 வயதான முதியவர், மஞ்சூர் அருகே முள்ளிகூர் கிராமத்தைச் சேர்ந்த 74 வயதான மூதாட்டி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தனர். அவர்கள் காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருந்ததால் அவர்களின் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏற்கனவே ஜவுளி வியாபாரி, தொழிலாளி ஆகிய 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். தற்போது 4 பேர் பலியாகி உள்ளதால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story