திருவாரூர் ரவுடி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் தஞ்சை கோர்ட்டில் சரண்


திருவாரூர் ரவுடி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் தஞ்சை கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 14 July 2020 1:57 AM GMT (Updated: 14 July 2020 1:57 AM GMT)

திருவாரூர் ரவுடி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் தஞ்சை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

தஞ்சாவூர்,

திருவாரூர் பெரிய மில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து என்ற கராத்தே மாரிமுத்து(வயது35). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் மாரிமுத்து ஆயுதங்களை வைத்து வழிப்பறியில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டு நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

கடந்த 7-ந்தேதி இரவு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். மறுநாள்(8-ந்தேதி) காலை திருவாரூர் மில் தெரு அருகில் உள்ள ரெயில்வே குட்ஷெட் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மாரிமுத்து அந்த பகுதியில் அடிக்கடி தகராறு செய்து வந்ததால், மாரிமுத்துவின் நண்பர்கள் சிலருடன் இணைந்து ஜாமீனில் எடுத்து வந்து அவரை கொலை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக மணி, வினோத் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் மாரிமுத்துவின் நண்பர்களான திருவாரூர் பெரியமில் தெருவை சேர்ந்த மரகதவேலன்(25), பாண்டியன்(33), திலிபன் (31), பிரபாகரன்(33), ஹசன் முகமது(30), பிரசாந்த்(29) ஆகியோரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த 6 பேரும் நேற்று தஞ்சை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு முகமது அலி முன்பு சரண் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரும் பாபநாசம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story