திருச்சி மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா பரிசோதனை மையங்கள் - கலெக்டர் தகவல்


திருச்சி மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா பரிசோதனை மையங்கள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 July 2020 2:15 AM GMT (Updated: 17 July 2020 2:15 AM GMT)

திருச்சி மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா பரிசோதனை மையங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது என்று கலெக்டர் சிவராசு கூறினார். இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் சராசரியாக தினமும் 1,140 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அதிக பட்சமாக ஒரே நாளில் 1,600 பரிசோதனைகள் நடத்தப்பட்டது. மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக வீடுகள்தோறும் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் தினமும் 50 முதல் 70 வீடுகளில் சோதனை நடத்துகிறார்கள்.திருச்சியில் கொரோனா பரவல் அதிகம் உள்ள 14 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களிலும் 3 அல்லது 4 பேருக்கு மேல் புதிதாக யாருக்கும் பாசிட்டிவ் என பரிசோதனை முடிவு வரவில்லை. எனவே திருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் பீதி அடைய தேவையில்லை.

உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளபடி சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்தால் நிச்சயமாக மூன்றே மாதங்களில் கொரோனாவை இல்லாமல் செய்து விடலாம்.

மதுரையை போல் திருச்சியிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதற்கு நான் பதில் அளிக்க முடியாது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட திருச்சி மாநகராட்சி பணியாளர்கள் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது குணம் அடைந்து விட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா பரிசோதனை மையங்களுக்கு அனுமதி கிடைத்து உள்ளது. திங்கட்கிழமை முதல் அவை செயல்பட தொடங்கும். கிராமப்புறங்களில் பிரச்சினை இல்லை. நகர்ப்புறங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். நாம் எடுத்து வரும் நடவடிக்கைகளால் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 12.13 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைந்து உள்ளது.மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை முடிவு 48 மணி நேரத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story