குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற டிரைவர் கைது


குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற டிரைவர் கைது
x
தினத்தந்தி 19 July 2020 9:20 AM IST (Updated: 19 July 2020 9:20 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே குடிபோதையில், மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பாலையூர்,

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள அசிக்காடு கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த காமராஜ் மகன் அய்யப்பன்(வயது 28). டிராக்டர் டிரைவரான இவரது மனைவி அகிலா(27). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன.

அய்யப்பன் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று அய்யப்பன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அதை அகிலா தட்டிக்கேட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

கழுத்தை நெரித்துக்கொலை

அப்போது போதையில் இருந்த அய்யப்பன் தனது மனைவி அகிலாவின் கழுத்தை கயிற்றால் நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் அகிலா மயங்கி கீழே விழுந்தார். உடனே அய்யப்பன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அகிலாவை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அகிலா இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அகிலாவின் தந்தை சீனிவாசன் என்பவர் குத்தாலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story