மந்திரி ஆனந்த்சிங்குக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்தது


மந்திரி ஆனந்த்சிங்குக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 27 July 2020 3:02 AM IST (Updated: 27 July 2020 3:02 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் வைரஸ் தொற்றுக்கு 82 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மந்திரி ஆனந்த்சிங்குக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளதால் அவர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது.

கோரமுகத்தைகாட்டும் கொரோனா

இந்த வைரஸ் பரவலை தடுக்க முன்களத்தில் நின்று பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், போலீஸ்காரர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆகியோரையும் கொரோனா தாக்கி வருகிறது. மேலும் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரையும் பாகுபாடின்றி தாக்கி வருகிறது.

கர்நாடகத்தில் ஏற்கனவே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பரத் ஷெட்டி, ராஜ்குமார் பட்டீல் தெல்கர், அனில் பெனகே, பாரண்ணா முனவள்ளி, மந்திரி சி.டி.ரவி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அஜய்சிங், ரங்கநாத், சிவண்ணா, பிரசாந்த் அப்பய்யா, பரமேஸ்வர் நாயக், ராஜேகவுடா, ராஜசேகர் பட்டீல், மகாந்தேஷ் கவுஜலகி, சுயேச்சை எம்.எல்.ஏ. சரத்பச்சே கவுடா ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், எம்.பி.க்கள் சுமலதா, பகவந்த் கூபா, மேல்-சபை உறுப்பினர்கள் சந்தேஷ் நாகராஜ், சந்திரசேகர் பட்டீல் ஆகியோரும் கொரோனாவிடம் சிக்கி உள்ளனர். இவர்களில் எம்.எல்.ஏ.க்கள் பரத்ஷெட்டி, சரத்பச்சே கவுடா, பிரசாந்த் அப்பய்யா, எம்.பி. சுமலதா ஆகியோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மந்திரி ஆனந்த் சிங்குக்கு பாதிப்பு

இந்த நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், கர்நாடக வனத்துறை மந்திரியுமான ஆனந்த்சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்லாரி மாவட்ட பொறுப்பு மந்திரியாக உள்ள ஆனந்த் சிங்கின் கார் டிரைவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர், பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டேயில் உள்ள அவருடைய இல்லத்தில் தனிமையில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி மந்திரி ஆனந்த்சிங், தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

அவருடைய மருத்துவ அறிக்கை நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில், மந்திரி ஆனந்த்சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இருப்பது தெரியவந்தது. ஆனால் அவருக்கு கொரோனா வைரசுக்குக்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும், அறிகுறி இல்லாமலேயே அவர் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீட்டிலேயே சிகிச்சை

இதனால் மந்திரி ஆனந்த் சிங், ஒசப்பேட்டேயில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட 2-வது மந்திரி ஆனந்த் சிங் ஆவார். ஏற்கனவே சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

82 பேர் பலி

இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று 5,199 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 82 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 90 ஆயிரத்து 942 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 5,199 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 96 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் நேற்று கொரோனாவுக்கு மேலும் 82 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,886 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரு நகரில் 1,950 பேர்

புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் 1,950 பேர், பல்லாரியில் 579 பேர், மைசூருவில் 230 பேர், பெங்களூரு புறநகரில் 213 பேர், தட்சிண கன்னடாவில் 199 பேர், உடுப்பியில் 169 பேர், தார்வாரில் 165 பேர், ஹாசனில் 164 பேர், பெலகாவியில் 163 பேர், கலபுரகியில் 152 பேர், விஜயாப்புராவில் 132 பேர், ராய்ச்சூரில் 131 பேர், தாவணகெரேயில் 89 பேர், உத்தரகன்னடாவில் 85 பேர், சிக்பள்ளாப்பூரில் 81 பேர், பீதரில் 77 பேர், மண்டியாவில் 64 பேர், கதக்கில் 61 பேர், சிக்கமகளூருவில் 61 பேர், யாதகிரியில் 56 பேர், சித்ரதுர்காவில் 53 பேர், கோலாரில் 49 பேர், ஹாவேரியில் 47 பேர், துமகூருவில் 46 பேர், பாகல்கோட்டையில் 41 பேர், கொப்பலில் 40 பேர், சிவமொக்காவில் 39 பேர், சாம்ராஜ்நகரில் 28 பேர், குடகில் 20 பேர், ராமநகரில் 15 பேர் உள்ளனர்.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 29 பேர், மைசூருவில் 5 பேர், தட்சிண கன்னடாவில் 7 பேர், தார்வாரில் 6 பேர், ஹாசனில் 3 பேர், பெலகாவி, கலபுரகியில் தலா 6 பேர், விஜயாப்புராவில் ஒருவர், தாவணகெரேயில் 3 பேர், உத்தரகன்னடா, சிக்பள்ளாப்பூரில் தலா 2 பேர், மண்டியாவில் ஒருவர், கதக்கில் 2 பேர், சிக்கமகளூருவில் ஒருவர், துமகூருவில் 5 பேர், பாகல்கோட்டையில் 2 பேர், சிவமொக்காவில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை

இதுவரை 35 ஆயிரத்து 838 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 2,088 பேர் அடங்குவர். 58 ஆயிரத்து 417 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 632 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 லட்சத்து 76 ஆயிரத்து 827 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 33 ஆயிரத்து 565 மாதிரிகள் அடங்கும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story