புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பா? இன்று முடிவு எடுப்பதாக நாராயணசாமி தகவல்


புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பா? இன்று முடிவு எடுப்பதாக நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 31 July 2020 4:40 AM IST (Updated: 31 July 2020 4:40 AM IST)
t-max-icont-min-icon

தளர்வுகள் குறித்து அரசு அதிகாரி களுடன் முதல்-அமைச்சர் நாராயண சாமி ஆலோசனை நடத்தினார். புதுச்சேரியில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அமைச்சர்களுடன் பேசி இன்று முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி,

கொரோனா உலகையே உலுக்கி வருகிறது.

அதிகாரிகளுடன் ஆலோசனை

தொற்று பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவுபெறுகிறது. இதையொட்டி மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை நேற்று முன்தினம் அறிவித்தது. அத்துடன் நிலைமைக்கேற்ப அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து புதுவையில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில் சுகாதாரத்துறை செயலாளரும் மாவட்ட கலெக்டருமான அருண், இயக்குனர் டாக்டர் மோகன் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகளை மேம்படுத்துதல், படுக்கைகளை அதிகப்படுத்துதல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக, அமைச்சர் ஷாஜகான், அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை கூட்டமைப்பு நிர்வாகிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

இரவுநேர ஊரடங்கு ரத்து

கொரோனா உயிரிழப்பை கட்டுப்படுத்தவும் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு இரவு நேர ஊரடங்கை தளர்த்தியும், உடற்பயிற்சி கூடங்களை திறக்கவும் அனுமதித்துள்ளது. திரையரங்குகள், கலை அரங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக கூடல், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், கோவில் விழாக்கள் நடத்த தடை நீடிக்கும்.

மாநிலத்தில் உள்ள வியாபாரிகள், தொழிலதிபர்கள், மருத்துவத் துறை அதிகாரிகளுடன் இன்று (நேற்று) ஆலோசனை நடத்தப்பட்டது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதிக்குள் 6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று கருதுகிறோம். அதற்கேற்ப தயாராக இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில அரசு சார்பில் எவ்வளவு தான் நடவடிக்கை எடுத்தாலும் மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை. மத்திய அரசிடமிருந்து வெண்டிலேட்டர், பாதுகாப்பு உடை கவசங்கள், மானிட்டர்கள் வந்துள்ளன. மத்திய அரசின் நிதி உதவி நமக்கு கிடைக்கவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அது கிடைத்தால்தான் தேவையான உபகரணங்களை பெருக்கவும், மருத்துவர்களை நியமிக்கவும் முடியும்.

இதற்காக முதல்கட்டமாக ரூ. 265 கோடி கொடுக்க வேண்டும், புதுவைக்கு மொத்தமாக ரூ.975 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் நமக்கு தரவில்லை.

ஊரடங்கு நீட்டிப்பா?

ஒருபுறம் மத்திய அரசின் விதிகளை கடைப்பிடிப்பதுடன் மற்றொருபுறம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் மாநில அரசு இருந்து வருகிறது. பக்கத்து மாநிலமான தமிழகத்தில் ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா?. என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து நாளை (இன்று) முடிவு செய்து அதன்பின் அறிவிப்பை வெளியிடுவோம்.

புதுவை மாநில மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்களின் வீட்டை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Next Story