கிரிக்கெட் பயிற்சி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை


கிரிக்கெட் பயிற்சி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Aug 2020 3:01 AM IST (Updated: 13 Aug 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

மலாடில் மும்பை கிரிக்கெட் பயிற்சி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை, 

மும்பை மலாடை சேர்ந்தவர் கரண் திவாரி(வயது27). இவர் மும்பை ரஞ்சி அணியின் வீரர்களுக்கு வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக இருந்து வந்தார். மும்பை சீனியர் அணியில் இடம்பெற வேண்டும் என நீண்ட காலமாக முயன்று வந்துள்ளார். ஆனால் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்தநிலையில் கரண் திவாரி சமீபத்தில் ராஜஸ்தானில் வசிக்கும் தனது நண்பருக்கு போன் செய்து பேசினார்.

அப்போது கிரிக்கெட் அணியில் விளையாட எனது பெயர் சேர்க்கப்படாததால் கடும் மனஉளைச்சலில் இருப்பதாகவும், இதனால் தனது வாழ்க்கையை முடித்து கொள்ள போவதாகவும் கூறியுள்ளார். உடனே அவரது நண்பர் சமாதானம் செய்ய முயன்றார். எனினும் சமாதானம் அடையாத கரண் திவாரி அழைப்பை துண்டித்து விட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர் சம்பவம் குறித்து கரண் திவாரியின் தாய்க்கு தகவல் தெரிவித்தார். பதறி போன தாய் அவரது அறை கதவை தட்டினார். ஆனால் பதில் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு கரண் திவாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது பற்றி தகவல் அறிந்த குரார் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட டி.வி. நடிகர் ஜித்து வர்மா கரண் திவாரியின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story