காஞ்சீபுரம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சுதந்திர தின விழா கொண்டாட்டம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சுதந்திர தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2020 12:31 AM GMT (Updated: 16 Aug 2020 12:31 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அண்ணா காவல் அரங்கத்தில், சுதந்திர தினவிழாவையொட்டி, மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடியினை ஏற்றிவைத்து போலீஸ் துறை மற்றும் ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் உள்ளாட்சித் துறை (நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சித்துறை) மருத்துவத்துறை, வருவாய்த்துறை போன்ற துறைகளில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக இருந்து சிறப்பாக பணியாற்றியமைக்காக பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் மின் மோட்டார் பொருந்திய தையல் எந்திரங்கள், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,439 மதிப்பீட்டில் நுண்ணுயிர்கொல்லி, நுண்ணூட்டக்கலவை, விதைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தலா ரூ.3 லட்சம் வீதம் 5 நபர்களுக்கு எஸ்.சி.ஏ.- டி.எஸ்.எஸ். தொகுப்பு வீடுகள், சமூக பாதுகாப்பு நலத்துறை சார்பில் 6 பேருக்கு மாதம் தலா ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் என 24 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 70 ஆயிரத்து 239 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

அதிகாரிகளுக்கு பாராட்டு

கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரி வி.கே.பழனி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆகியோரை கலெக்டர் வெகுவாக பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன், மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரி டாக்டர் வி.கே.பழனி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, கனிமவளத்துறை உதவி இயக்குனர் பெருமாள் ராஜா, மாவட்ட மக்கள்தொடர்புத்துறை அதிகாரி என்.சிவகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மண்டல கூட்டுறவு அலுவலகத்தில்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல கூட்டுறவு அலுவலகத்தில் தேசிய கொடியை காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அகோ சந்திரசேகர் ஏற்றினார். இதில் துணைப்பதிவாளர்கள் சங்கர், உமாபதி, மணி, ராஜநந்தினி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சத்தியநாராயணன், மேலாளர் முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திலும் கொடியேற்றப்பட்டது.


Next Story