விநாயகர் சிலைகளை கரைக்க சதுப்பேரி ஏரியில் மின்விளக்கு, தடுப்புவேலி அமைக்கும் பணி
விநாயகர் சிலைகளை கரைக்க சதுப்பேரி ஏரியில் தடுப்புவேலி, மின்விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மசூதிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர்,
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொது இடங்களில் இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவினர், அப்பகுதி இளைஞர்கள் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்வார்கள். அவற்றை 3 நாட்களுக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று அருகேயுள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கவும் தமிழக அரசு தடைவிதித்தது. பொதுமக்கள் வீடுகளில் சிலைகள் வைத்து வழிபட்டு, அவற்றை நீர்நிலைகளில் கரைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் கரைக்கப்படும்.
தடுப்புவேலி, மின்விளக்கு வசதி
வேலூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை சதுப்பேரி ஏரி உள்பட 4 இடங்களில் கரைக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அங்கு செல்வதற்கு பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
சதுப்பேரி ஏரிக்கு மெயின் சாலையில் இருந்து சிறிது தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே அந்த பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பாதையின் இருபுறமும் தடுப்புவேலிகள், அதனையொட்டி மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்தனர்.
இதற்கிடையே நேற்று சிலர் விநாயகர் சிலைகளை சதுப்பேரி ஏரியில் கரைத்தனர். கோட்டை அகழியில் சிலைகளை கரைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இளைஞர்கள் சிலர் தடையை மீறி கோட்டை அகழியில் சிலைகளை கரைப்பதை காணமுடிந்தது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கிய மசூதிகள் முன்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதேபோன்று சதுப்பேரி ஏரியிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story