திருச்சி ஜி-கார்னர் மார்க்கெட்டில் மழை நீரில் மிதந்த காய்கறிகள்


திருச்சி ஜி-கார்னர் மார்க்கெட்டில் மழை நீரில் மிதந்த காய்கறிகள்
x
தினத்தந்தி 26 Aug 2020 4:39 AM IST (Updated: 26 Aug 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஜி-கார்னர் மார்க்கெட்டில் மழைநீரில் காய்கறிகள் மிதந்தன. ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், திருச்சி பொன்மலை ஜி-கார்னரில் இரவு வேளையில் நடக்கும் காந்தி மார்க்கெட் மொத்த காய்கறி சந்தையில் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் மழையில் இருந்து வியாபாரிகள் ஒதுங்கக்கூட இடம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். நனைந்தபடியே சிலர் வியாபாரம் செய்தலும், மழைநீர் திடலில் தேங்கி நின்றதால் காய்கறிகள் எல்லாம் மிதக்க தொடங்கின. தேங்காய், கத்தரிக்காய், கேரட், எலுமிச்சை, உருளைக்கிழங்கு உள்ளிட்டவை மழை பெய்த அசுத்த நீரில் மிதந்தன.

திரும்பி சென்ற பொதுமக்கள்

அத்துடன் லாரிகளில் இருந்து மூட்டை மூட்டையாக இறக்கி வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் உள்ளிட்டவையும் மூட்டையுடன் நனைந்தன. மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வந்த சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் அசுத்தமான தண்ணீரில் மிதந்த காய்கறிகளை வாங்க அச்சப்பட்டனர். சிலர் எதுவுமே வாங்காமல் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் கூறியதாவது:-

போராட்டம்

மழை பெய்தால் ஜி-கார்னரில் ஒதுங்க இடமில்லை. இதுவரை மாவட்ட நிர்வாகத்தால் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. வரும் காலம் மழைக் காலம் என்பதால் தொடர்ந்து எங்களால் ஜி-கார்னரில் வியாபாரம் செய்ய முடியாது. மாவட்ட நிர்வாகமோ கொரோனா என்று காந்தி மார்க்கெட்டை மூடினார்கள்.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கள்ளிக்குடி மார்க்கெட்டை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், காந்தி மார்க்கெட்டை செப்டம்பர் 15-ந் தேதி வரை திறக்க இடைக்கால தடை விதித்திருக்கிறது. எனவே, கோர்ட்டு வழக்கை சட்டப்படி மாவட்ட நிர்வாகமே முன்னெடுத்து இடைக்கால தீர்ப்பை ரத்துசெய்து காந்தி மார்க்கெட் திறக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால் அனைத்து வியாபாரிகளும் வியாபாரத்தை நிறுத்துவதோடு நாங்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவராக அனைத்து வியாபாரிகளின் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம், தொடர் பட்டினிப் போராட்டம் குடும்பத்துடன் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story