தூத்துக்குடியில் பஸ் போக்குவரத்து தொடங்கியது பயணிகள் மகிழ்ச்சி


தூத்துக்குடியில் பஸ் போக்குவரத்து தொடங்கியது பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 2 Sep 2020 12:35 AM GMT (Updated: 2 Sep 2020 12:35 AM GMT)

தூத்துக்குடியில் மாவட்டத்துக்குள் பஸ் போக்குவரத்து நேற்று தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு பஸ்களை மாவட்டத்துக்குள் இயக்க அனுமதி அளித்து உள்ளது. இதனால் நேற்று முன்தினம் அனைத்து பஸ்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.

87 பஸ்கள்

நேற்று காலை 5 மணி முதல் பஸ்கள் டெப்போவில் இருந்து புறப்பட தொடங்கின. அந்தந்த பஸ்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தற்காலிக பஸ்நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போன்று அருகில் உள்ள கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 87 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது, அரசு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது 87 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் சில பஸ்கள் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. சில பஸ்களில் பயணிகள் இல்லாமல் செல்கிறது. இன்னும் ஒரு சில நாட்கள் கழித்துதான் மக்கள் கூட்டத்தை கணிக்க முடியும். பயணிகள் வரத்து அதிகரித்தால் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இயக்கப்படும் பஸ்கள் நிறுத்த வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

மகிழ்ச்சி

இதுகுறித்து திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு பஸ்சில் பயணம் செய்த சுந்தர் கூறும் போது, நான் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் வேலை இன்றி தவித்து வந்தோம். சில தளர்வுகளுக்கு பிறகு எங்கள் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டு பணிகள் தொடங்கியது. அப்போது எனக்கு பணி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பஸ் போக்குவரத்து இல்லாததால் தினமும் மோட்டார் சைக்கிளில் நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்கு சென்று வந்தேன். இதனால் எனக்கு அதிக செலவு ஏற்பட்டு வந்தது. தற்போது, பஸ் இயக்கப்பட்டு இருப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. பஸ்சில் தற்போது சமூக இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்து உள்ளோம். மக்கள் கூட்டம் அதிகரிக்கும் போது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது சிரமம். ஆனாலும் உரிய விழிப்புணர்வுடன் பஸ்சில் தொடர்ந்து பயணம் செய்வேன் என்று கூறினார்.

மாவட்டங்களுக்கு இடையே...

தூத்துக்குடியை சேர்ந்த பயணி ராணி கூறும் போது, அரசு பஸ் போக்குவரத்தை தொடங்கி உள்ளது. நாங்கள் குடும்பத்துடன் தூத்துக்குடியில் வசித்து வருகிறோம். எங்கள் பெற்றோர் நெல்லையில் வசித்து வருகின்றனர். தற்போது மாவட்டத்துக்குள் மட்டும் பஸ் இயக்கப்படுவதால், நெல்லைக்கு செல்ல முடியவில்லை. பெற்றோரை பார்க்க செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். ஆகையால் மாவட்டத்துக்கு இடையேயும் பஸ் இயக்க வேண்டும். அதே நேரத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு சமூக இடைவெளியை பஸ்சில் கடைபிடிக்க போக்குவரத்து கழகம் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பஸ்களில் தினமும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 67 பஸ்கள் உள்ளன. இதில் நேற்று 16 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. கோவில்பட்டியில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, விளாத்திகுளம், கயத்தாறு, கழுகுமலை வரை பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை மாவட்ட எல்லையான சன்னதுபுதுக்குடி வரை பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்களிடம் அதிகளவு வரவேற்பு இல்லை. இதனால் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களில் அரசு அறிவித்த எண்ணிக்கையில் மக்கள் ஏறியவுடன் இயக்கப்பட்டது. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story