பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது பயணிகளிடம் ஆர்வம் இல்லை


பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது பயணிகளிடம் ஆர்வம் இல்லை
x
தினத்தந்தி 8 Sept 2020 3:17 AM IST (Updated: 8 Sept 2020 3:17 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. ஆனால் பயணம் செய்ய பயணிகள் போதிய ஆர்வம் செலுத்தவில்லை.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையில் ரெயில் போக்குவரத்து சேவை நேற்று தொடங்கியது. தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று காலை 6.45 மணிக்கு விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

அவரை, மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் வரவேற்றார். பின்னர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிக்கும் எந்திரம், உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி, டிக்கெட் கவுண்ட்டர்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், நகரும் படிக்கட்டுகள், பிளாட்பாரங்களில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எம்.சி.சம்பத் பார்வையிட்டார்.

பயணிகளிடம் ஆர்வம் இல்லை

பின்னர் காலை சரியாக 7 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு புறப்பட்ட முதல் ரெயிலில் எம்.சி.சம்பத் மற்றும் அதிகாரிகள் பயணம் செய்தனர். பயணத்தின்போது பயணிகளிடம் பயண அட்டை (‘ஸ்மார்ட் கார்டு’), ‘கியூ.ஆர்.’ குறியீடு டிக்கெட் செயல்பாடு, பயண அட்டையை பரிசோதிக்கும் கருவியின் செயல்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பயனுள்ள வகையில் இருக்கிறதா?

வேறு என்ன வசதிகள் வேண்டும்? என்பது குறித்தும் பயணிகளிடம், எம்.சி.சம்பத் கேட்டறிந்தார். பின்னர் நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையம் வந்ததும் அமைச்சர் எம்.சி.சம்பத், மெட்ரோ ரெயிலில் இருந்து இறங்கி தன்னுடைய காரில் புறப்பட்டு சென்றார். கொரோனா பீதி காரணமாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய பயணிகளிடம் நேற்றைய தினம் போதிய ஆர்வம் இல்லை. இதனால் மெட்ரோ ரெயில்கள் குறைவான பயணிகளையே சுமந்து சென்றதை காணமுடிந்தது.

சமூக இடைவெளியுடன் பயணம்

நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பிரதீப் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய-மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் சேவையில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காற்று செலுத்தும் பாதைகளில் கதிர்கள் செலுத்தப்பட்டு நுண்ணிய கிருமிகள் கூட அழிக்கப்பட்டு தூய்மை உறுதி செய்யப்படுகிறது.

அதேபோல் 5 பேர் கொண்ட இருக்கையில் சமூக இடைவெளியுடன் 3 பேர் அமரும் வகையில் குறியீடுகளும் போடப்பட்டு உள்ளன. முககவசம் இல்லாமல் வரும் பயணிகளை அனுமதிப்பதில்லை. கால்களால் இயக்கப்படும் லிப்டுகள், 3 மணி நேரத்திற்கு ஒரு முறை ரெயில் நிலையங்கள் சுத்தப்படுத்துவது, நுழைவு வாயிலில் டிக்கெட் ஸ்கேன் செய்யும் எந்திரங்கள் அமைத்திருப்பது போன்றவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மாதம் ரூ.50 லட்சம் கூடுதல் செலவு

பயண அட்டைகளையும் பயணிகள் ‘ரீசார்ஜ்’ செய்து செல்கின்றனர். அலுவலக நேரங்களில் 5 நிமிட இடைவெளியில் ஒரு ரெயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரெயிலும் இயக்கப்படுகிறது. சாலை பொது போக்குவரத்திலும் பெரிய அளவில் பயணிகள் பயணிப்பதில்லை. அதேபோல் மெட்ரோ ரெயிலிலும் ஆரம்பத்தில் பயணிகள் குறைவாக தான் வருவார்கள். படிப்படியாக இந்த நிலை மாறும்.

பயணிகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 32 மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் பாதுகாப்புக்காக அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக வழக்கத்தை விட கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதால் அவர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்காக மாதந்தோறும் கூடுதலாக ரூ.50 லட்சம் செலவினம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நாளில் காற்று வாங்கிய மெட்ரோ ரெயில்

சென்னையில் மெட்ரோ ரெயில் நேற்று காலை 7 மணி முதல் ஓட தொடங்கியது. நோய் தொற்றில் இருந்து பயணிகளை பாதுகாப்பதற்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனாலும் காலை மற்றும் பிற்பகல் நேரத்தில் பயணிகள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லாததால், ரெயில்கள் முதல் நாளிலேயே காற்று வாங்கின. அதாவது விரல் விட்டு எண்ணும் அளவுக்கே பயணிகள் பயணம் செய்ததை காணமுடிந்தது.

நேற்றைய தினம் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு? வசூல் ஆன தொகை எவ்வளவு? என்பது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story