விக்கிரமங்கலம் அருகே ரேஷன் கடை கட்ட இடம் ஒதுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்


விக்கிரமங்கலம் அருகே ரேஷன் கடை கட்ட இடம் ஒதுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Sept 2020 4:28 AM IST (Updated: 17 Sept 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலம் அருகே ரேஷன் கடை கட்ட இடம் ஒதுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விக்கிரமங்கலம்,

விக்கிரமங்கலம் அருகே உள்ள செட்டித்திருக்கோணம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள கீழத் தெருவில் ஓடு போட்ட சிறிய கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்தநிலையில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால், தற்போது இயங்கி வரும் இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு, போதிய இடவசதியில்லை. ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்கள் ஆகிவிட்ட காரணத்தால் செட்டித்திருக்கோணம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்ட இடம் ஒதுக்கவேண்டும் என்றும், வேறு ஊருக்கு ரேஷன் கடையை மாற்றக் கூடாது என்றும் வலியுறுத்தி நேற்று காலை செட்டித்திருக்கோணம் பொதுமக்கள் அரியலூர்- விக்கிரமங்கலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் உறுதி

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் நாகமங்கலம் வருவாய் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சொல்லி புதிய ரேஷன் கடை கட்ட இடம் தேர்வு செய்யப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்- விக்கிரமங்கலம் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story