கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2020 4:00 AM IST (Updated: 20 Sept 2020 1:36 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி தென்காசி மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி,

தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. ஈவு தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். கிராமப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் நாட்களை அதிகப்படுத்த வேண்டும். மேலும் இதனை பேரூராட்சிக்கு விரிவுபடுத்த வேண்டும். சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு நகரச் செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் அயூப் கான், கணபதி, மாரியப்பன், பிச்சையா உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். சுமார் அரை மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாவூர்சத்திரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் தங்கம் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் வேல்முருகன், தாலுகா குழு உறுப்பினர்கள் ஆரியமுல்லை, மகாவிஸ்ணு, முருகேசன், அறிஞர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில் தேரடி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் குருசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி, தாலுகா செயலாளர் அசோக்ராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஸ்டீபன்ராஜ், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகிரி பஸ் நிலையம் அருகே காந்தி கலையரங்கம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இடை கமிட்டி உறுப்பினர் ராமசுப்பு, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன், தமிழ்நாடு போக்குவரத்து மத்திய சங்க துணைத்தலைவர் அமல்ராஜ், மாற்றுத்திறனாளி சங்க துணைத்தலைவர் சக்திவேல், துணை செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story