மீமிசல் அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி


மீமிசல் அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 20 Sep 2020 1:30 AM GMT (Updated: 20 Sep 2020 1:30 AM GMT)

மீமிசல் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நாசர். இவருடைய மகன் ரியாஸ் (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி மூடப்பட்டுள்ளதால், இவர் வீட்டில் இருந்து வந்தார். இவர் நேற்று ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினத்தில் உள்ள தனது நண்பரான பாரிஸ் முகம்மதுவின் மகன் பகத் அஸ்லாம் (24) என்பவரை பார்க்க சென்றார்.

பகத் அஸ்லாம் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். பகத் அஸ்லாமை பார்த்துவிட்டு, ரியாஸ் ஊருக்கு திரும்ப புறப்பட்டார். அப்போது அவரை ஊரில் விட்டுவிட்டு வருவதாக பகத் அஸ்லாம் கூறி, தனது மோட்டார் சைக்கிளில் ரியாசை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் கோபாலப்பட்டினம் நோக்கி வந்தார். மோட்டார் சைக்கிளை பகத் அஸ்லாம் ஓட்ட, ரியாஸ் பின்னால் அமர்ந்திருந்தார்.

2 பேர் சாவு

மீமிசல் அருகே உள்ள உப்பளம் பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிள் பகத் அஸ்லாமின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து, நீண்ட தூரம் சென்று அங்குள்ள ஒரு பள்ளத்தில் விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ரியாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பகத் அஸ்லாமை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மதுரைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார், 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story