தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 6 பேர் பலி


தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 6 பேர் பலி
x
தினத்தந்தி 20 Sep 2020 6:26 AM GMT (Updated: 20 Sep 2020 6:26 AM GMT)

தேனி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. முதியவர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடமலைக்குண்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்த 52 வயது ஆண், கோம்பை காமராஜர் நகரை சேர்ந்த 77 வயது முதியவர், போடி போஜன் தெருவை சேர்ந்த 43 வயது ஆண், ஆண்டிப்பட்டி அருகே மூலக்கடையை சேர்ந்த 55 வயது பெண், பெரியகுளத்தை சேர்ந்த 42 வயது பெண், மயிலாடும்பாறையை சேர்ந்த 70 வயது முதியவர் என நேற்று ஒரேநாளில் 6 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.

55 பேருக்கு தொற்று

இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், கொரோனா பாதிப்பில் இருந்து 81 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 364 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் நேற்று 450 பேருக்கு சளி, ரத்த மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story