கெலமங்கலம் அருகே, மழை வேண்டி ஏரியில் தேவதைகளுக்கு சிறப்பு பூஜை 40 கிராம மக்கள் பங்கேற்பு


கெலமங்கலம் அருகே, மழை வேண்டி ஏரியில் தேவதைகளுக்கு சிறப்பு பூஜை 40 கிராம மக்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Sep 2020 2:15 AM GMT (Updated: 21 Sep 2020 2:15 AM GMT)

கெலமங்கலம் அருகே, மழை வேண்டி ஏரியில் கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி 40 கிராம மக்கள் வழிபட்டனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் கிராமத்தில் சுமார் 115 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் நாகமங்கலம், அயர்னப்பள்ளி, ஊடேதுர்க்கம் ஆகிய ஊராட்சிகளிலுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.

இந்த பகுதியில் போதிய மழை இல்லாததால் ஏரி வறண்டு விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்கள் பாதிக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராமமக்கள் நாகமங்கலம் ஏரியில் நேற்று சிறப்பு யாகம், பூஜை நடத்தினர்.

அன்னதானம்

முன்னதாக சுற்றுப்புற கிராமங்களில் இருந்து எல்லம்மா, கங்கம்மா, செல்லபுரியம்மா, புட்டுமாரியம்மா, பைரேஷ்வரா, திம்மராயசாமி, முத்தப்பா, பீரப்பா, வெங்கடரமணசாமி ஆகிய கிராம தேவதைகளை மேள தாளங்களுடன் ஏரிக்கு கொண்டு வந்து சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தினர். அப்போது நல்ல மழை பெய்து நாடு நலம்பெற வேண்டும் என கிராமமக்கள் வேண்டி வழிபட்டனர்.

இதில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள் சாமிகள் முன்பு அமர்ந்தனர். அப்போது பூசாரிகள் அவர்களை சாட்டையால் அடித்தனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 40 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story