கழுமலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடக் கோரி சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


கழுமலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடக் கோரி சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 22 Sep 2020 2:18 AM GMT (Updated: 22 Sep 2020 2:18 AM GMT)

கழுமலை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு அலுவலக நுழைவு வாயில் கேட்டை பூட்டினர்.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே செம்மங்குடி, திருத்தோணிபுரம், தில்லைவிடங்கன், சிவனார்விளாகம், திட்டை, தென்பாதி,கைவிளாஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு தயாராக இருந்தனர். இந்தநிலையில் கடந்த ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் இதுநாள் வரை காவிரி கடைமடை பகுதியான மேற்கண்ட பகுதிகளுக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய முடியாமலும், நாற்றங்கால் தயார் செய்ய முடியாமலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் பலமுறை பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று கழுமலை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரை தண்ணீர் திறக்கவில்லை.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்றுமுன்தினம் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் கழுமலை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுப்பணித்துறை அலுவலக நுழைவுவாயில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலக நுழைவுவாயில் கேட்டை பூட்டி கோஷமிட்டனர்.

தொடர் போராட்டம்

தகவல் அறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்று(புதன்கிழமை) கழுமலை ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை பகுதிக்கு முழுமையாக தண்ணீர் வழங்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,

திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், சிவனார்விளாகம் உள்ளிட்ட கிராமங்களில் இதுவரையில் பாசன வாய்க்காலில் நீர் வராததால் நாற்றங்கால் தயார் செய்ய முடியாத நிலை உள்ளது. அதிகாரிகளின் மெத்தன போக்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறோம். உடனடியாக கழுமலை ஆற்றில் தண்ணீர் திறக்கவில்லை என்றால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.

Next Story