குளச்சல் பஸ் நிலையத்தில் 6 மாத குழந்தை கடத்தல் பெற்றோரிடம், போலீசார் விசாரணை


குளச்சல் பஸ் நிலையத்தில் 6 மாத குழந்தை கடத்தல் பெற்றோரிடம், போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Sept 2020 8:01 AM IST (Updated: 22 Sept 2020 8:01 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் பஸ் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளச்சல்,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா. இவருடைய மனைவி புஷ்பவல்லி. நரிக்குறவர்களான இவர்கள், தங்கள் குழுவினருடன் ஒவ்வொரு ஊராக சென்று தேன், மற்றும் பாசிமாலைகளை விற்பனை செய்து வருகிறார்கள். முத்துராஜா தம்பதிக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் முத்துராஜா தம்பதியினர் தங்கள் குழுவினருடன் குளச்சல் பகுதிக்கு வந்தனர். குளச்சல் சுற்றுவட்டார பகுதியில் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு குளச்சல் பஸ் நிலைய நடைமேடையில் தூங்குவது வழக்கம்.

குழந்தை மாயம்

நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் முத்துராஜா மற்றும் அவருடைய மனைவி குழந்தையுடன் பஸ்நிலைய நடைமேடையில் தூங்கினர். அவர்களுடன் வந்தவர்களும் அங்கு படுத்து தூங்கினர்.

நள்ளிரவில் முத்துராஜாவும், அவருடைய மனைவியும் எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன்-மனைவி மற்றும் உடன் இருந்தவர்கள் அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனாலும், குழந்தை கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

கடத்தலா?

பின்னர், முத்துராஜா குளச்சல் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி குளச்சல் பஸ்நிலையத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை யார் கடத்தியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோரிடமும் விசாரணை நடக்கிறது. பஸ் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story