பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்; 6 பேர் கைது ரூ.5¾ லட்சம் ரொக்கம் பறிமுதல்


பெங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்; 6 பேர் கைது ரூ.5¾ லட்சம் ரொக்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Sept 2020 4:04 AM IST (Updated: 24 Sept 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5¾ லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளின் போது பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த வீட்டில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. அதாவது போட்டியை டி.வி.யில் பார்த்தபடியே 5 பேர் பணம் வைத்து சூதாடினார்கள். இதையடுத்து, கஜேந்திரா, மணிகண்டா, அருண்குமார், வருண்குமார், ஜோசப் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1¾ லட்சம் ரொக்கம், கார், ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது,

இதுபோல, மல்லேசுவரத்தில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சூதாட்ட கும்பல்களுடன் செல்போனில் பேசியபடி ஒரு வாலிபர் சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அந்த வீட்டில் சோதனை நடத்தி வினய் என்பவரை கைது செய்தனர். இவர், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கிய முதல் நாளில் இருந்தே சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

கைதான வினயிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம், 2 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக பானசாவடி மற்றும் மல்லேசுவரம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு சம்பவங்களிலும் கைதானவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.5¾ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story