மராட்டியத்தில் தீபாவளி வரை பள்ளிகள் திறப்பு இல்லை அஜித்பவார் தகவல்


மராட்டியத்தில் தீபாவளி வரை பள்ளிகள் திறப்பு இல்லை அஜித்பவார் தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2020 9:52 PM GMT (Updated: 8 Oct 2020 9:52 PM GMT)

மராட்டியத்தில் தீபாவளி வரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார்.

மும்பை,

மத்திய அரசு வருகிற 15-ந் தேதிக்கு பிறகு படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம் என அறிவித்து உள்ளது. இதற்கான வழிகாட்டுதலையும் வழங்கியது. இது தொடர்பாக அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இந்தநிலையில் இது தொடர்பாக நேற்று முன்தினம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த மராட்டிய மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது வருகிற தீபாவளிக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆன்லைன் கல்வி குறித்து ஆய்வு

தற்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளதாலும், நவராத்திரி மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் வருகிற 15-ந் தேதிக்கு பிறகு பள்ளிகளை திறப்பது இல்லை என மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டது.

இதேபோல முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாணவர்களுக்கு தற்போது நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் கல்வி குறித்து ஆய்வு செய்ய பள்ளி கல்வி துறைக்கு உத்தரவிட்டார்.

அஜித்பவார் பேட்டி

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து நேற்று துணை முதல்-மந்திரி அஜித்பவாரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

தீபாவளி முடியும் வரை மராட்டியத்தில் பள்ளிகள் திறக்கப்படாது. அதன் பிறகு பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து முதல்-மந்திரி ஆலோசித்து முடிவு எடுப்பார். சில மாநிலங்கள் அவசர கதியில் பள்ளிகளை திறந்தன. அந்த மாநிலங்களில் மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மீண்டும் பள்ளிகளை மூடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story