வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: சென்னையை குளிர்வித்த திடீர் மழை


வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: சென்னையை குளிர்வித்த திடீர் மழை
x
தினத்தந்தி 16 Oct 2020 10:52 PM GMT (Updated: 16 Oct 2020 10:52 PM GMT)

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று திடீரென மழை பெய்து சென்னையை குளிர்வித்தது.

சென்னை,

தமிழகம் முழுவதும், தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பொதுவாக சென்னைக்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் நல்ல மழை கிடைக்கும்.

ஆனால், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் லேசான மழை பெய்தது. வெப்பத்தின் தாக்கத்தையே அனுபவித்து வந்த சென்னை வாழ் மக்களின் மனதில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், சென்னையில் நேற்றைய பொழுதும் வெயிலுடன் விடிந்தது. பொழுது விடிந்த சிறிது நேரத்திலேயே சூரியன் தனது கோரத் தாண்டவத்தை காட்டினான். சுட்டெரிக்கும் சூரியனால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

வெளுத்து வாங்கிய மழை

ஆனால், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதியம் 1 மணியளவில் திடீரென வானத்தில் கார்மேகம் சூழ்ந்தது. அதைத் தொடர்ந்து, சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. லேசாக பெய்யத் தொடங்கிய மழை படிப்படியாக அதிகரித்து வெளுத்து வாங்கியது. அதன்படி, சென்னை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, நந்தனம், சூளைமேடு, ஓட்டேரி, பெரம்பூர், மூலக்கடை, மாதவரம், கொளத்தூர், புழல் உள்பட பல இடங்களில் மழை பெய்தது.

காலையில் வீட்டில் இருந்து புறப்படும்போது வெயில் அடித்ததால், பலர் மழைக் கோட்டு எதுவும் எடுக்காமல் வந்ததால், இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் மழையில் நனைந்தபடியே சென்றதை பார்க்க முடிந்தது. பலர் பஸ் நிறுத்தங்கள் மற்றும் கடைகளின் தாழ்வாரங்களில் ஒதுங்கி நின்றனர். திடீர் மழை காரணமாக சாலையோர கடை வியாபாரிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

குளிர்ச்சியடைந்த சென்னை

சாலைகளில் பள்ளமான இடங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. வாகனங்களில் சென்றவர்கள் வேகமாக பயணிக்க முடியாமல் மெதுவாக செல்வதை பார்க்க முடிந்தது.

நேற்று மதிய வேளையில் மழை பெய்ததால் வீட்டில் வெப்பத்தின் தாக்கத்தில் தவித்த இல்லத்தரசிகளின் மனதில் பூரிப்பை ஏற்படுத்தியது.

மதியம் 1 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை மாலை 4 மணிக்கு மேலும் விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. காலையில் சூரியனின் வெப்பக்கதிர் வீச்சுக்கு ஆளான சென்னைவாசிகளுக்கு மதியம் முதல் மாலை முழுவதும் மழையுடன் கூடிய ரம்மியமான சூழல் நிலவியது. இவ்வாறு சென்னையை குளிர்வித்த மழை காரணமாக அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story