விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் ஷில்பா தகவல்


விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2020 11:49 PM GMT (Updated: 16 Oct 2020 11:49 PM GMT)

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காணொலி காட்சி மூலம் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆன்லைன் காட்சிகள் மூலம் கலெக்டரிடம் காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். கலெக்டர் அங்கு கூடி இருந்த அதிகாரிகளிடம் விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துக் கூறினார்.

அணையில் நீர் இருப்பு

இதைத்தொடர்ந்து கலெக்டர் ஷில்பா பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. அணைகளில் 42.6 சதவீத தண்ணீர் இருப்பு உள்ளது. இதுவரை 5ஆயிரத்து 82 ஹெக்டேரில் நெல் பயிரும், 749 ஹெக்டேர் சிறுதானியங்களும், 921 ஹெக்டேர் பயிர் வகைகளும், 636 ஹெக்டேர் பருத்தியும், 33 ஹெக்டேர் கரும்பும், 273 ஹெக்டேர் எண்ணெய் வித்துக்களும் பயிரிடப்பட்டுள்ளன.

மானிய விலையில் உரங்கள்

பிசான பருவ பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் போதியளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த இடுபொருட்கள் வினியோகம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக பி.ஓ.எஸ். எந்திரங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

பிரதம மந்திரியின் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணுயிர் பாசன கருவிகளான மழை தூவான், தெளிப்பு நீர் பாசன கருவிகள் மற்றும் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.10½ கோடி ஒதுக்கீடு

மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 2,500 ஹெக்டேர் பரப்பில் செயல்படுத்திட ரூ.10 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் உதவி இயக்குனர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாசன முறையில் கரும்பு, தென்னை, பருத்தி, நிலக்கடலை, பயிர் வகைகள் பயிரிடப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, அடங்கல், கம்ப்யூட்டர் சிட்டா, நிலத்தின் வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களுடன் www.tnhorticulture.tn.gov.in/horti/mimis என்ற இணையதளத்தில் பதிவு செய்து வேளாண்மை உதவி இயக்குனர் மூலம் பயன்பெறலாம்.

விதைகள்

நெல்லை மாவட்டத்தில் 238 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு 802 விதை மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 3 மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது தரமற்றவையாக கண்டறியப்பட்ட 1.628 மெட்ரிக் டன் விதைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1¾ லட்சம் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story