முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா நீடிக்க மாட்டார் பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி


முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா நீடிக்க மாட்டார் பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 20 Oct 2020 9:46 PM GMT (Updated: 20 Oct 2020 9:46 PM GMT)

முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா நீடிக்க மாட்டார் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

விஜயாப்புரா,

பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., முஸ்லிம்கள் குறித்து அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அவர் தற்போது முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா நீண்ட நாள் நீடிக்க மாட்டார். எங்கள் கட்சி மேலிட தலைவர்களுக்கும் அவர் போதும் என்றாகிவிட்டது. வட கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் தான் மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரியாக பதவி ஏற்பார். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் 95 சதவீதம் பேர் வட கர்நாடகத்தை சேர்ந்தவர்கள். இதை பா.ஜனதா மேலிட தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் மற்ற பகுதிகளில் 15 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று, அதில் ஒருவர் முதல்-மந்திரியாக நியமிக்கப்படுகிறார்.

நீடிக்க மாட்டார்

அதனால் அடுத்த முறை வட கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் தான் முதல்-மந்திரி ஆவார். பிரதமர் மோடியும், வட கர்நாடகத்தை சேர்ந்தவருக்கு முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். எடியூரப்பாவுக்கும், எனக்கும் தகராறு தொடங்கியுள்ளது. எனது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.125 கோடி நிதியை முதல்-மந்திரி எடியூரப்பா ரத்து செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவருக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர் திட்டங்களை சிவமொக்காவுக்கு எடுத்து செல்கிறார். இனி எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் நீடிக்க மாட்டார். அதற்கான நேரம் தற்போது வந்துள்ளது. அந்த ரூ.125 கோடியை கொண்டு விஜயாப்புராவில் சிமெண்டு ரோடு அமைக்க திட்டமிட்டிருந்தேன். அந்த நிதியை மீண்டும் பெறாமல் விடமாட்டேன். நாங்கள் தற்போது மாநிலத்தின் தென்பகுதிக்கு சென்று அவர்களின் வீட்டு முன்பு நிற்கிறோம். அதே போல் தென்பகுதிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எங்கள் வீட்டு முன் வந்து நிற்பார்கள்.

இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.

நாங்கள் ஆதரிக்கிறோம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உமேஷ்கட்டி வீட்டில் வட கர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி ரகசிய ஆலோசனை நடத்தினர். அவர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக களம் இறஙகியிருப்பதாக தகவல் பரவியது. அப்போது பசனகவுடா பட்டீல் யத்னால், எடியூரப்பாவுக்கு எதிராக பேசி வருகிறார். எடியூரப்பா எங்கள் தலைவர் இல்லை என்று வெளிப்படையாகவே கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பசனகவுடா பட்டீல் யத்னாலின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ., “கர்நாடகத்தில் முதல்-மந்திரி பதவி காலியாக இல்லை. மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களும் ஆதரவு வழங்கியதால் எங்கள் கட்சி ஆட்சியில் உள்ளது. வட கர்நாடகத்தின் வளர்ச்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். தலைமை குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். எடியூரப்பா சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். வட கர்நாடகத்தை சேர்ந்த அனைத்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதா, எடியூரப்பாவுக்கு ஆதரவாக உள்ளனர். பசனகவுடா பட்டீல் யத்னால் பக்கம் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உள்ளனரா?. அவர்பகல் கனவு காண்கிறார். அவ்வாறு கனவு காண வேண்டாம்“ என்றார்.

Next Story