போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி பெங்களூருவில் பலத்த மழை


போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி பெங்களூருவில் பலத்த மழை
x
தினத்தந்தி 23 Oct 2020 10:13 PM GMT (Updated: 23 Oct 2020 10:13 PM GMT)

பெங்களூருவில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் கடந்த 4 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு உள்பட பல்வேறு கட்டிடங்களில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் காலை முதலே மேகமூட்டம் இருந்தது. மாலை 5 மணியளவில் கருமேகங்கள் ஒன்றுகூடி மழை பெய்யத்தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக ஒசகெரேஹள்ளி, பீயா, பனசங்கரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. மேலும் அந்த பகுதிகளில் இருந்த குடியிருப்பு கட்டிடங்களில் மழைநீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த வீடுகளில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்த மழைநீரை பாத்திரங்களில் எடுத்து வெளியேற்றினர். நகரின் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி நின்றது.

சாலைகள் பழுதாகிவிட்டன

இதன் காரணமாக மெஜஸ்டிக், அரண்மனை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். ஒகலிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சுரங்க பாதைகளில் மழைநீர் முழங்கால் உயரத்திற்கு தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சுரங்க பாதைகளை கடந்து செல்ல சிரமப்பட்டனர். தொடர் மழை காரணமாக நகர சாலைகள் பழுதாகிவிட்டன.

ஆங்காங்கே குழி ஏற்பட்டு, வாகன ஓட்டிகளை பதம் பார்த்து வருகிறது. மழையால் ஏற்பட்டுள்ள குழிகளை மூட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை ஒரு புறம் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், இன்னொருபுறம் 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமான மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story