சென்னையில் விடிய, விடிய மழை: கோவில் தெப்பக்குளங்களில் தண்ணீர் தேங்கியது
சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் கோவில் தெப்பக்குளங்களில் தண்ணீர் தேங்கியது.
சென்னை,
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தெப்பக்குளங்கள் கோவில் விழாக்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் குளத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கும் பட்சத்தில் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் மற்றும் கோவில் தெப்பக்குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கியது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்திலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தெப்பக்குளமான கைரவினி புஷ்கரணியிலும் அதிகளவில் மழைநீர் தேங்கியது.
கால்வாய் சீரமைக்க கோரிக்கை
ஆனால் வரத்து கால்வாய்கள் முறையாக சீரமைக்கப்படாத புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் உள்பட அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோவில் தெப்பக்குளங்களுக்கு விடிய, விடிய மழை பெய்தும் ஒரு சொட்டு தண்ணீர் வரவில்லை.
எனவே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உள்ள தெப்பக்குளங்களையும், அவற்றுக்கு தண்ணீர் வரும் மழைநீர் கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறநிலையத்துறை உத்தரவு
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவில் தெப்பக்குளங்களுக்கு வரும் மழைநீர் வரத்து கால்வாய்களை உடனடியாக முறையாக பராமரிக்க வேண்டும் என அனைத்து கோவில் நிர்வாகத்தினருக்கும் இந்து அறநிலையத்துறை கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவை ஒரு சில கோவில் நிர்வாகிகள் மட்டுமே கடைபிடித்தனர்.
எனவே கோவில் தெப்பக்குளங்களுக்கான வரத்து கால்வாய்களை உடனடியாக சீரமைத்து, மழைநீரை தெப்பக்குளங்களில் சேமிக்கும்படி மீண்டும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story