தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கடலில் மூழ்கிய மீனவர் பிணமாக மீட்பு


தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கடலில் மூழ்கிய மீனவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 1 Nov 2020 10:29 AM IST (Updated: 1 Nov 2020 10:29 AM IST)
t-max-icont-min-icon

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கடலில் மூழ்கிய மீனவர் பிணமாக மீட்கப்பட்டார்.

கருங்கல், 

தூத்தூர் அருகே வள்ளவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 53), மீனவர். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து 4 பேருடன் வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றார். முகப்பு பகுதியில் இருந்து சிறிது தூரம் சென்ற போது ராட்சத அலை ஒன்று வள்ளம் மீது வேகமாக வீசியது. இதில் வள்ளம் கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் ஏசுதாசனை தவிர மற்ற 4 பேரும் நீந்தி கரை சேர்ந்தனர்.

ஆனால் ஏசுதாசன் கடலில் மூழ்கி மாயமானார். அவரை மற்ற மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இதனால் ஏசுதாசன் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

பிணமாக மீட்பு

இந்தநிலையில் நேற்று காலை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கடல் பகுதியில் ஏசுதாசன் உடல் பிணமாக மீட்கப்பட்டது. பின்னர் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கிய மீனவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story