14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு: டி.வி. சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கேட்டு மனு
தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.
மும்பை,
மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக்(வயது53). இவருக்கு பிரபல ஆங்கில டி.வி. சேனலான ‘ரிபப்ளிக்‘ ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி(47) நிலுவை தொகையை வழங்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அன்வய் நாயக் தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். தற்போது அன்வய் நாயக்கின் மகள் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அளித்த புகாரின்பேரில், வழக்கை மறுவிசாரணை நடத்த மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அலிபாக் போலீசார் மும்பை லோயர் பரேலில் உள்ள அர்னாப் கோஸ்வாமி வீட்டுக்கு சென்று கட்டிட உள்வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் பெரோஸ் சேக், நிதேஷ் சர்தா ஆகியோரையும் கைது செய்து உள்ளனர்.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அலிபாக் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். மேலும் 3 பேரையும் தங்களது காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால் மாஜிஸ்திரேட்டு சுனைனா பிங்களே, அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுத்தார்.
மேலும் இதுகுறித்து மாஜிஸ்திரேட்டு, “குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கான காரணங்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதங்களை கருத்தில் கொள்ளும் போது, கைது நடவடிக்கை சட்டவிரோதம் போல தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை” என கூறினார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேரையும் 14 நாட்கள், அதாவது வருகிற 18-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அலிபாக் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜாமீன் கேட்டு மனு
இந்த நிலையில் அலிபாக் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவை ரத்து செய்து, அர்னாப் கோஸ்வாமியை விசாரிக்க தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று அதில் கோரி உள்ளனர். இந்த மனு நாளை (சனிக்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமி தனக்கு இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தனது கைது சட்டவிரோதம் என்றும், எனவே தனக்கு எதிரான எப்.ஐ.ஆர்-யை ரத்து செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.
Related Tags :
Next Story