மழைக்காலத்துக்கு முன்பே வடிகால்களை தூர்வாராததால் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதி கனிமொழி எம்.பி. பேட்டி


மழைக்காலத்துக்கு முன்பே வடிகால்களை தூர்வாராததால் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதி கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2020 5:51 PM GMT (Updated: 19 Nov 2020 5:51 PM GMT)

தூத்துக்குடி மாநகர பகுதியில் மழைக்காலத்துக்கு முன்பே வடிகால்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருவதாக, கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை பார்வையிட்டார். தூத்துக்குடி தனசேகர் நகர், தபால்தந்தி காலனி, ஜார்ஜ் ரோடு, லசால் தெரு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது மழைநீரை விரைந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். அவருடன் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

பின்னர் கனிமொழி எம்.பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாதாள சாக்கடை திட்டம்

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் மழைநீர் செல்கிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் தலைவர் கலைஞர் பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்கி வைத்தார். அதில் பாதி வேலைகள் தி.மு.க. ஆட்சியிலேயே முடிந்து விட்டது. மீதம் உள்ள பணிகள் கூட இதுவரை முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அந்த பணி முடிக்கப்பட்டு இருந்தால் தண்ணீர் வடிவதற்கான வாய்ப்பு இருந்து இருக்கும்.

ஆனால் தொடர்ந்து ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதே பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறோம். தற்போது மழைநீர் வடிகால் அமைத்து வருகின்றனர். ஆனால் அதில் எந்த பகுதியில் தண்ணீர் வடியும் என்ற எந்த திட்டமும் இல்லாமல் நடக்கிறது. கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படவில்லை. ஸ்மார்ட்சிட்டி திட்டம் நடந்து வந்தாலும், மழைக்காலத்துக்கு முன்பே வடிகால் பணியை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினோம். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. இதனால் தொடர்ந்து பிரச்சினைகள் உள்ளன.

பாதுகாப்பு

இலங்கையில் பிடிபட்டு உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும். மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி மீனவர்களுக்கு பாதுகாப்பை உருவாக்கித்தர வேண்டும். தி.மு.க. எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைக்க வேண்டிய நிலைதான் உள்ளது. இதனால்தான் இங்கு நிலைமை மோசமாக உள்ளது. தி.மு.க. ஆட்சியாக இருந்தால் அனைத்து பணிகளையும் சிறப்பாக முடித்து இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story