டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் கைது முன்னாள் மேயரின் போலீஸ் காவல் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு போலீசார் விசாரணை


டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் கைது முன்னாள் மேயரின் போலீஸ் காவல் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 Nov 2020 11:04 PM GMT (Updated: 19 Nov 2020 11:04 PM GMT)

டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் கைதான முன்னாள் மேயரின் போலீஸ் காவல் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு, 

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி நடந்திருந்த வன்முறையில் புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீடு, டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு தீவைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக கூறி, பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் சம்பத்ராஜ் கடந்த 16-ந் தேதி நள்ளிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். நேற்று சம்பத்ராஜின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் காணொலி காட்சி மூலமாக நீதிபதி முன்னிலையில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். டி.ஜே.ஹள்ளி வன்முறை குறித்து சம்பத்ராஜிடம் மேலும் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்டனர். இதையடுத்து, மேலும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து சம்பத்ராஜிடம் விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

சம்பத்ராஜிடம் தீவிர விசாரணை

இதையடுத்து, நேற்று சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து சம்பத்ராஜிடம், உதவி போலீஸ் கமிஷனர் வேணுகோபால் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர். ஆனால் டி.ஜே.ஹள்ளியில் நடந்த வன்முறைக்கும், எம்.எல்.ஏ. வீட்டுக்கு தீவைத்த விவகாரத்திற்கும், தனக்கும் எந்த விதமான சம்பந்தம் இல்லை என்று சம்பத்ராஜ் தொடர்ந்து கூறி வருவதாக தெரிகிறது. அதே நேரத்தில் புலிகேசிநகர் வார்டு கவுன்சிலராக இருந்ததால், வன்முறை நடந்த பகுதிக்கு தான் சென்றதாகவும், சிலரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் போலீசாரிடம் சம்பத்ராஜ் கூறி இருப்பதாக தெரிகிறது.

தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல என்றும், சட்டசபை தேர்தலில் அகண்ட சீனிவாசமூர்த்தி வெற்றி பெறுவதற்காக, வார்டு கவுன்சிலராக தன்னால் முடிந்த உதவிகளை செய்ததாகவும், தனக்கும் அவருக்கும் எந்த விதமான அரசியல் பிரச்சினைகளும் இல்லை என்று சம்பத்ராஜ் கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. என்றாலும், டி.ஜே.ஹள்ளி வன்முறை, அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது குறித்து சம்பத்ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முன்னாள் மேயர் சம்பத்ராஜின் போலீஸ் காவல் நிறைவு பெறுவதால், அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Next Story