அம்பேத்கர் நினைவு நாளில் தாதர் சைத்ய பூமியில் கூட்டம் கூடவேண்டாம் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்


அம்பேத்கர் நினைவு நாளில் தாதர் சைத்ய பூமியில் கூட்டம் கூடவேண்டாம் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Nov 2020 9:23 PM GMT (Updated: 23 Nov 2020 9:23 PM GMT)

அம்பேத்கர் நினைவுநாளான டிசம்பர் 6-ந் தேதி தாதர் சைத்யபூமியில் கூட்டம் கூட வேண்டாம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

மும்பை, 

மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் சட்டமேதை அம்பேத்கரின் சைத்யபூமி உள்ளது. அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6-ந் தேதி மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தாதர் சிவாஜி பார்க் வந்து சைத்யபூமியில் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இந்தநிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு பொதுமக்கள் தாதர் சைத்யபூமிக்கு வரவேண்டாம் என மஹாபரினிர்வன் (அம்பேத்கரின் நினைவு நாள்) ஒருங்கிணைப்பு குழு கேட்டுகொண்டு உள்ளது. ஒங்கிணைப்பு குழுவின் முடிவை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வரவேற்று உள்ளார்.

சைத்ய பூமியில் கூட வேண்டாம்

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

மஹாபரினிர்வன் தினம் பாரத ரத்னா அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் நாளாகும். அந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா பிரச்சினையை கருத்தில்கொண்டு பொதுமக்கள் இந்த ஆண்டு மும்பை சைத்யபூமியில் கூட்டம் கூட வேண்டாம். நினைவு நாள் அன்று ஹெலிகாப்டர் மூலம் அம்பேத்கர் நினைவிடத்தில் பூக்கள் தூவப்படும். இதேபோல நினைவு நாள் அன்று முக்கிய நிகழ்வுகள் ஊடகங்களில் ஒளிபரப்பப்படும்.

நீங்கள் இருக்கும் இடத்திலேயே அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், சமூகநீதி துறை மந்திரி தனஞ்செய் முண்டே, மும்பை பொறுப்பு மந்திரி அஸ்லாம் சேக் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story