நிவர் புயலை எதிர்கொள்ள காஞ்சீபுரம் மாவட்டம் தயார் நிலையில் உள்ளது கலெக்டர் தகவல்


நிவர் புயலை எதிர்கொள்ள காஞ்சீபுரம் மாவட்டம் தயார் நிலையில் உள்ளது கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2020 11:47 PM GMT (Updated: 24 Nov 2020 11:47 PM GMT)

நிவர் புயலை எதிர்கொள்ள காஞ்சீபுரம் மாவட்டம் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 126 இடங்கள் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டு அந்த இடங்களை கண்காணிக்க 19 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிவாரண பணி குழுக்களை கண்காணிக்க மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் 3 அலுவலர்களும், துணை கலெக்டர் நிலையில் 7 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 381 ஏரிகள் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், ஏரிகளை பாதுகாக்க, ஒவ்வொரு ஏரிக்கும் மண்டல துணை தாசில்தார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மேற்பார்வையில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்கவைக்க நிவாரண முகாம்கள் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன.

பொதுமக்கள் தொடர்பு கொள்ள...

மேலும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 64 ஜெனரேட்டர்கள், 65 மரம் அறுக்கும் எந்திரங்கள், 52 ஆயிரத்து 400 மணல் மூட்டைகள், 3 ஆயிரத்து 945 சவுக்கு கம்புகள், 3 ஆயிரத்து 907 மின்கம்பங்கள், 27 ஆம்புலன்ஸ், 377 மருத்துவ குழுக்கள், 85 படகுகள், 136 பாதுகாப்பு உடை, 33 நீர் உறிஞ்சும் கருவிகள், 110 பொக் லைன் எந்திரங்கள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் புயல் குறித்த தகவல்களை தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களான 044 27237107, 27237207 கொடுக்கப்பட்டுள்ளது.

தாலுகா வாரியாக, காஞ்சீபுரம் (044)27222776, உத்திரமேரூர் 27272230, வாலாஜாபாத் 27256090, ஸ்ரீபெரும்புதூர் 27162231, குன்றத்தூர் 24780449, மற்றும் தீயணைப்பு துறை 27222899 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் பொதுமக்கள் 24, 25-ந்தேதிகளில் கனமழை மற்றும் புயல் வீச உள்ளதால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள்

முக்கிய ஆவணங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் அத்தியாவசிய பொருட் களை போதுமான அளவில் இருப்பு வைத்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம், மாவட்ட நிர்வாகத்தில் இருந்து புயல் கடந்துவிட்டது என்று அதிகார அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளான ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பாளர்கள் அல்லது வெளி நபர்களால் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி அவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம் உடன் இருந்தார்.

Next Story