ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை தடையின்றி வழங்க நடவடிக்கை அமைச்சர் காமராஜ் தகவல்


ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை தடையின்றி வழங்க நடவடிக்கை அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 27 Nov 2020 10:31 AM GMT (Updated: 27 Nov 2020 10:31 AM GMT)

ரேஷன் கடைகளில் தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையையொட்டி கட்டுப்பாட்டு அறையில் நேற்று முதினம் இரவு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து களத்தில் பணியாற்றும் அலுவலர்களுடன் தொலைபேசி இணைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசி, தாழ்வான பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் உணவு வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை கேட்டறிந்தார். அப்போது கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

50 ஆயிரம் பேருக்கு...

நிவர் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்வதற்கு பல்வேறு முன்னேற்பாடுகளை அரசு செய்தது. திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதியை சேர்ந்த மக்கள் அருகிலுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் தங்கி உள்ள 50 ஆயிரம் பேருக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்பட்டுள்ளன. அனைத்து முகாம்களிலும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காலம் என்பதை கருத்தில் கொண்டு கபசுரக்குடிநீர், முககவசம், கிருமிநாசினி ஆகியவை முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அ.தி.மு.க. சார்பில் உணவு வினியோகம்

தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வசித்தவர்களின் வீடுகளில் சமையல் செய்ய முடியாத சூழல் உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் உணவு வழங்கப்பட்டது. திருவாரூர், நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் வழங்குவதற்கான உணவு வாகனம் மூலம் அனுப்பப்பட்டது. திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து உணவு எடுத்து செல்லும் வாகனங்களை அமைச்சர் காமராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் மூர்த்தி, ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story