18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 Nov 2020 10:23 AM IST (Updated: 29 Nov 2020 10:23 AM IST)
t-max-icont-min-icon

18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

சேலம்,  

சேலம் சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரங்கோலி போட்டி ஆகியவை நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு வந்த பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் கலெக்டர் ராமன் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2021 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்டத்தில் சுவரொட்டி வரைதல், கவிதை போட்டிகள், பாடல் எழுதுதல் மற்றும் வாசகம் எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திற்குட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16-ந் தேதி அன்று வெளியிடப்பட்டது.

சிறப்பு முகாம்

மேலும், அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்கள், 1,163 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 21, 22-ந் தேதிகளில் நடைபெற்றது. மேலும் வருகிற 12, 13-ந் தேதிகளில் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

முகாமில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்திடவும், தொகுதி மாறி இடம் பெயர்ந்த வாக்காளர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் 6, பெயர் நீக்கம் செய்திடவும், இருமுறை வாக்காளர்களாக பதிவாகியுள்ளவர் பெயர் நீக்கம் செய்யவும், தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு இடமாறுதல் செய்தவர்களும் தங்களது பெயர்களை நீக்கம் செய்யவும் படிவம் 7, பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பாலின திருத்தம், வயது திருத்தம், வாக்காளர் பட்டியல் புகைப்பட மாற்றம் போன்றவைகள் திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8, மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் பாகம் விட்டு பாகம் இடமாறிய வாக்காளர்கள் படிவம் 8ஏ ஆகியவற்றிற்கான விண்ணப்பம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் பெற்று பூர்த்திசெய்து வழங்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், ‘ Vot-er he-l-p-l-i-ne ’ என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் பதிவினை உறுதி செய்ய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மேலும் 31.12.2002 அன்று மற்றும் அதற்கு முன்பு பிறந்து 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய இந்த சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் 20-ந் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தை கலெக்டர் ராமன் பார்வையிட்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story