சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்


சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 3 Dec 2020 10:11 AM IST (Updated: 3 Dec 2020 10:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் சாமுண்டிபுரத்தை அடுத்த திருநீலகண்டர் வீதியில் வசித்து வந்தவர் செல்வம் என்பவரின் ஜோதி. இவர் கடந்த 7 ஆண்டுகளாக அதே பகுதியில் மாத சீட்டு மற்றும் பலகார சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் திருநீலகண்டர் வீதி, செல்லம்மாள் காலனி, அம்மன் வீதி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.

இந்த நிலையில் சீட்டிற்கு பணம் கட்டியவர்களுக்கு தீபாவளிக்கு பணம் கொடுக்க வேண்டிய ஜோதி கடந்த மாதம் 5-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. பணம் கட்டியவர்கள் ஜோதியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது முறையாக பதில் கூறவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜோதி ஒருசிலரை வைத்து அவருடைய வீட்டில் இருந்த சாமான்களை எடுத்துக் கொண்டு காலி செய்ய முயன்றுள்ளார்.

வீட்டை முற்றுகையிட்டனர்

இதுகுறித்து தகவலறிந்ததும் சீட்டிற்கு பணம் கட்டியவர்கள் ஜோதியின் வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு பணம் கொடுக்காமல் வீட்டை காலி செய்யக்கூடாது என்று கூறியதுடன், இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டை காலி செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். இந்த நிலையில் ஜோதி நடத்திய சீட்டில் சேர்ந்து பணம் கட்டிய பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

ரூ.30 லட்சம்

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கடந்த 7 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வரும் ஜோதியிடம் நம்பிக்கையின் பேரில் மாத சீட்டு மற்றும் பலகார சீட்டிற்கு பணம் கட்டி வந்தோம். தற்போது ஜோதி தலைமறைவாகி விட்டதுடன், பலமுறை அவரை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டும், முறையான எந்த பதிலும் இல்லை. எனவே ஜோதியிடம் இருந்து எங்களுக்கு வர வேண்டிய தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வரும் ஜோதி 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் மாத சீட்டு மற்றும் பலகார சீட்டிற்கு பணம் கட்டியவர்களுக்கு சுமார் ரூ.30 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

Next Story