பெரம்பலூர் அருகே பரிதாபம்: 3 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை; கணவர் கைது


கண்ணன்; கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சத்யாவின் உடலை படத்தில் காணலாம்.
x
கண்ணன்; கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சத்யாவின் உடலை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 12 Dec 2020 2:32 AM IST (Updated: 12 Dec 2020 2:32 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே 3 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவரை போலீசார் கைது செய்தனர்.

கிணற்றில் குதித்துதற்கொலை
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் 1-வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 31). கொத்தனார். இவருடைய மனைவி சத்யா(26). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் குடிபோதையில் கண்ணன், சத்யாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் கண்ணன் குடிபோதையில் வீட்டிற்கு சென்று, சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டு, குழந்தைகள் முன்பு அவரை தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த சத்யா இரவில் வீட்டிற்கு வெளியே ஓடிச்சென்று அருகே உள்ள பொது கிணற்றில் குதித்தார். இதனை கண்ட கண்ணன் மனைவியை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். ஆனால் சத்யா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்காதல்
இதையடுத்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கிணற்றில் இருந்து சத்யாவின் உடல் மீட்கப்பட்டு, வெளியே கொண்டு வரப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், கண்ணனுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனை சத்யா கண்டித்ததால் ஆத்திரமடைந்த கண்ணன் குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு சத்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சத்யா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது
இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் இறந்ததாலும், தந்தையை போலீசார் கைது செய்ததாலும் 3 குழந்தைகளும் தற்போது அனாதையாக நிற்கின்றன.

இந்த சம்பவத்தினால் அந்த கிராமமே சோகத்தில்மூழ்கியது.

Next Story