தேனி அருகே ரூ.266 கோடியில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்


தேனி அருகே ரூ.266 கோடியில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Dec 2020 9:18 AM GMT (Updated: 12 Dec 2020 9:18 AM GMT)

தேனி அருகே ரூ.266 கோடி மதிப்பில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டுமான பணிகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

தேனி, 

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியால் பெரியகுளத்தில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி, போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. அரசு சட்டக்கல்லூரியும் தொடங்கப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தேனி அருகே தப்புக்குண்டு பகுதியில் ரூ.266 கோடி மதிப்பில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுகிறது. சுமார் 253.64 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைகிறது. இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து கல்லூரி கட்டுமான பணிகள் தொடக்க விழா தப்புக்குண்டுவில் நேற்று நடந்தது. விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் அங்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நடவு செய்தனர். கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்.

இந்த விழாவில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசந்திரன், பதிவாளர் டென்சிங் ஞானராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, தேனி கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் பழனிசாமி, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா நடேஷ், தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ.ராஜா, துணைத்தலைவர் செல்லமுத்து, ஆவின் பொது மேலாளர் தியானேஷ்பாபு, ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன், துணைத்தலைவர் வரதராஜன், கூடலூர் நகர செயலாளர் அருண்குமார், சின்னமனூர் நகர செயலாளர் ராஜேந்திரன், தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன், கம்பம் ஒன்றிய செயலாளர் இளையநம்பி, உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் கதிரேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் அழகுராஜா, சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், போடி ஒன்றிய செயலாளர் சற்குணம், கடமலை-மயிலை வடக்கு ஒன்றிய செயலாளர் கொத்தாளமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.தர்மராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் பார்த்திபன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளரும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான வசந்தா நாகராஜன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் டி.கே.ஆர்.கணேசன், பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் தீபன் சக்கரவர்த்தி, மாவட்ட பிரதிநிதி நடேஷ், தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, மாநில துணை செயலாளர் சுந்தரவடிவேல், துணைத்தலைவர் ராஜசேகரன், உயர்மட்ட ஆட்சிக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் அழகேசன், தேனி நகர செயலாளர் குரூஸ்தண்டபாணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், கம்பம் முன்னாள் நகர்மன்ற தலைவர் டி.டி.சிவகுமார், அ.தி.மு.க. நிர்வாகி அரண்மனை சுப்பு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story