தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு அதிகரிப்பு முற்றிலும் இழப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் தவிப்பு


தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு அதிகரிப்பு முற்றிலும் இழப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் தவிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2020 4:14 AM GMT (Updated: 18 Dec 2020 4:14 AM GMT)

தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழை பெய்து வருவதால், அறுவடைக்கு தயாரான சம்பா நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் 1,35,147 எக்டேரில் நடவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2-ந்தேதி முதல் புரெவி புயல் காரணமாக தொடர் மழை பெய்ததால் தஞ்சை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 730 எக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மழையின் காரணமாக ஏற்கெனவே மழையால் அறுவடை செய்யும் நேரத்தில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்கத் தொடங்கியுள்ளது. பல இடங்களில் வயலில் தற்போது பெய்த மழைநீர் தேங்கியுள்ளதால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கி சேதத்துக்குள்ளாகியுள்ளது. தொடர்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மேலும் ஏற்கனவே சாய்ந்த நெற்பயிர்களில் குறைந்த அளவு நெல்மணிகள் முளைத்த நிலையில் தற்போது முற்றிலும் முளைத்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். மேலும் பல இடங்களில் நெற்பயிர்கள் அதிக அளவில் சாய்ந்துள்ளது. தண்ணீர் வடிவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

விவசாயிகள் கவலை

குறிப்பாக தஞ்சையை அடுத்த வாண்டையார் இருப்பு, துறையுண்டார்கோட்டை, மூர்த்தியம்பாள்புரம், சடையார்கோயில், ராகவம்பாள்புரம், கீழ உளூர் போன்ற இடங்களில் அறுவடைக்கு தயாரான சம்பா நெற்கதிர்கள் மழையில் சேதமாகியுள்ளது.

வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் அதனை விவசாயிகள் வடியவைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், ஏற்கெனவே ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் தற்போது நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

உரிய இழப்பீடு

இதுகுறித்து துறையுண்டார்கோட்டை விவசாயி அன்பரசன் கூறுகையில், ‘‘ஏற்கனவே பெய்த மழையினால் நெற்பயிர்கள் சாய்ந்து முளைத்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனக்கு 7 ஏக்கரில் அறுவடை செய்யும் நேரத்தில் தற்போது பெய்யும் மழையில் வயலில் மழைநீர் தேங்கி, நெற்கதிர்கள் சாய்ந்துள்ளது. தொடர்ந்து ஈரப்பதம் இருந்ததால் நெல்மணிகள் முற்றிலும் முளைத்து சேதமாகி உள்ளது. நெற்பயிர்களும் அழுகி அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்தும் அந்த மகசூலை எடுக்க முடியாத சூழலில் விவசாயிகள் உள்ளோம். இந்த பகுதியில் மட்டும் 150 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெல் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மீண்டும் பாதிப்புக்குள்ளான பயிர்களின் சேதத்தை கணக்கெடுப்பு செய்து, எங்களுக்கு அரசு உரிய இழப்பீடை வழங்க வேண்டும்’’என்றார்.

இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது மழை பெய்து வருவதால் பல இடங்களில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அந்தந்த பகுதி விரிவாக்கப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர் மூலம் கணக்கெடுத்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’’ என்றனர்.

Next Story