வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான தேர்வை 2,776 பேர் எழுதினர் மேலாண்மை இயக்குனர் ஆய்வு


வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான தேர்வை 2,776 பேர் எழுதினர் மேலாண்மை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Dec 2020 3:42 AM GMT (Updated: 21 Dec 2020 3:42 AM GMT)

தென்னிந்திய பன்-மாநில வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான தேர்வை 2,777 பேர் எழுதினர். தேர்வு மையங்களை கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

வேலூர்,

மத்திய வேளாண் கூட்டுறவு கட்டுப்பாட்டில் உள்ள தென்னிந்திய பன்-மாநில வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விவசாய பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் இந்த சங்கங்களில் மேற்பார்வையாளர், விற்பனையாளர், அலுவலக உதவியாளர் என்று 44 காலி பணியிடங்கள் உள்ளன.. இதற்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 3,507 பேருக்கு எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி, ஊரீசு பள்ளி, அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, ஈ.வெ.ரா.நாகம்மை அரச மகளிர் பள்ளி, காட்பாடி மகளிர் அரசு பள்ளி, தோட்டப்பாளையம் மகளிர் அரசுப் பள்ளி, சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளி உள்பட 14 மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்பார்வையாளர்களுக்கு தேர்வு காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் காலை 9மணி முதல் தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினார்கள். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மேலாண்மை இயக்குனர் ஆய்வு

மேற்பார்வையாளர் தேர்வு எழுத 2,500 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் 1,950 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 550 பேர் பங்கேற்கவில்லை. வேலூர் வெங்கடேஸ்வரா, ஊரீசு பள்ளி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களை சங்க மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

மாலை 2 மணி முதல் 3.30 வரை விற்பனையாளர், அலுவலக உதவியாளர்கள் 1,007 பேருக்கு தேர்வு நடைபெற்றது. 827 பேர் தேர்வு எழுதினர். 180 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு அறை மற்றும் மையங்களை கண்காணிக்கும் பணியில் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இருந்தனர். வேளாண்மை கூட்டுறவு சங்க விற்பனை மேற்பார்வையாளர்,, விற்பனையாளர், அலுவலக உதவியாளர் எழுத்துத் தேர்வை 2,777 பேர் எழுதினர். 730 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story