பணி நிரந்தரம் செய்யக்கோரி சேலம் கலெக்டரிடம் செவிலியர்கள் மனு


பணி நிரந்தரம் செய்யக்கோரி சேலம் கலெக்டரிடம் செவிலியர்கள் மனு
x
தினத்தந்தி 24 Dec 2020 4:59 AM GMT (Updated: 24 Dec 2020 4:59 AM GMT)

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த செவிலியர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

சேலம்,

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த செவிலியர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராமனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்று சூழலில் நோயை கட்டுப்படுத்துவதற்கும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் 32-க்கும் மேற்பட்ட செவிலியர் மற்றும் உதவியாளர்கள் தன்னார்வத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டோம். ஆனால் எங்களை எவ்வித முன் அறிவிப்பு இல்லாமல் கடந்த 23-ந் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என்றும், பணியில் இருந்து இடைநீக்கம் செய்வதாகவும் செவிலியர் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நாங்கள் பணிபுரிந்து வந்த பணிகளை விட்டுவிட்டு தான் வேலைக்கு வந்துள்ளோம். எனவே, தற்காலிகமாக கொரோனா பணியில் ஈடுபட்டு வந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story