திருச்சி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம்: கொட்டும் மழையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்


திருச்சி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம்: கொட்டும் மழையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
x
தினத்தந்தி 1 Jan 2021 2:07 AM GMT (Updated: 1 Jan 2021 2:07 AM GMT)

திருச்சி மாவட்டத்தில் நேற்று தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, கொட்டும் மழையில் பிரசாரம் செய்தார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்தது. இருப்பினும் தனது தேர்தல் சுற்றுப்பயணம் தடைபடக்கூடாது என்ற நோக்கத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமியை தரிசனம் செய்து விட்டு, அங்குள்ள ராஜகோபுரம் முன்பு கொட்டும் மழையிலும் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. அவரது பேச்சை கேட்க ஆவலாக ஆண்களும், பெண்களும் மழையில் நனைந்தபடியும், சிலர் குடைகளை பிடித்தபடியும் கூடி நின்றனர்.

குடை வேண்டாம்... துண்டு போதும்...

கோவிலில் தரிசனம் முடிந்து வாகனத்தில் இருந்து இறங்கி அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு நடந்து சென்றார். அப்போது அவரது பாதுகாவலர்கள் குடையை எடுத்து கொண்டு வேகமாக வந்தனர்.

அவர்களிடம், ‘எனக்கு குடை வேண்டாம். துண்டு எடுத்து வாருங்கள்' என எடப்பாடி பழனிசாமி கூறினார். சிறிது தூரம் மழையில் நனைந்தபடி நடந்து சென்ற அவருக்கு, உடனே ஒரு வெள்ளை துண்டு கொடுக்கப்பட்டது. அதை அவர் தலையில் போர்த்தியபடி மேடைக்கு ஏறி உரையாற்றினார்.

தொடர்ந்து வேனில் புறப்பட்டு சென்றார். திருச்சி மலைக்கோட்டை அண்ணா சிலை அருகில் வழிநெடுகிலும் பொதுமக்கள் நின்று கைக்கூப்பினர். அவர்களை வேனில் இருந்தபடியே வணங்கி சென்றார்.

ஆம்புலன்சுக்கு வழி

தொடர்ந்து சோமரசம்பேட்டை வழியாக சென்று திண்டுக்கல் பைபாஸ் சாலையில் மரவனூர் சென்றார். அங்கு அவருக்கு வாணவேடிக்கை மற்றும் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல், நனைந்தபடியே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

சோமரசம்பேட்டையில் திறந்த வேனில் நின்றபடி, அவர் பிரசாரம் செய்தபோது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த ஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்குமாறு அங்கு நின்றிருந்த கூட்டத்தினரை எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து மணப்பாறை மாரியம்மன் கோவில், பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மழை தூறிக்கொண்டே இருந்தது. தொடர்ந்து கொட்டும் மழையில் சென்று காவல்காரன்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடினார். அங்கு மகளிர் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பூரண கும்ப மரியாதையும் கொடுக்கப்பட்டது. பின்னர், விராலிமலை, திருவெறும்பூர் சென்று பிரசாரம் செய்தார். மாலையில் திருச்சி பாலக்கரை மரக்கடை பொதுக்கூட்டத்தில் பேசினார்.

Next Story