கோவையில், நாளை மறுநாள் 24 மையங்களில் குரூப்-1 தேர்வு நடக்கிறது
கோவையில் நாளை மறுநாள் 24 மையங்களில் குரூப்-1 தேர்வு நடக்கிறது.
கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குரூப்-1 தேர்வு
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 24 தேர்வு மையங்களில் உள்ள 40 தேர்வு கூடங்களில் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 11 ஆயிரத்து 887 பேர் எழுதுகிறார்கள். இதற்கான நுழைவு சீட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்தினை தெரிந்து கொள்ளலாம்.மேலும் தேர்வு மையங்களுககு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ேதர் வை கண்காணிக்க 9 நடமாடும் அலுவலர்கள், 40 தேர்வு கூட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 5 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடுகள் நடக்காமல் இருக்க மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் வீடியோ பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்
கொரோனா பரவல் காரணமாக தேர்வுக்கூடங்களில் போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்து முனை பேனாவை (பால் பாயிண்ட்) மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில் மற்றும் ஏனைய நிற மை பேனாக்களை பயன்படுத்தக்கூடாது. விடைத் தாளில் உரிய இடங்களில் (இரு இடங்களில்) கையொப்பமிட்டு இடது கைப்பெருவிரல் ரேகையினை பதிக்க வேண்டும்.
கூடுதலாக 15 நிமிடங்கள்
வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குள் ஏதேனும் கேள்விகளுககு விடை தெரியவில்லையென்றால் விடைத்தாளில் (ஓ.எம்.ஆர்.ஷீட்) இ என்ற வட்டத்தினை கருமையாக்க வேண்டும். விடைத்தாளில் ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையமாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்கப்பட வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாகும் பட்சத்தில் தேர்வர் பெறும் மதிப்பெண்களிலிருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இதை செய்வதற்கு மட்டுமே ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதாவது மதியம் ஒரு மணி முதல் 1.15 மணி வரை இதை செய்து முடித்து விடைத்தாளினை தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் ஆதார் எண்ணை இணைத்து இணையவழியாக தேர்வு நுழைவுசீட்டினை பதிவிறக்கம் செய்து தேர்வு நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story